India

சாலையில் அறுந்து விழுந்த பாஜக அமைச்சர் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனர்.. ஒருவர் படுகாயம்: மக்கள் கண்டனம்

புதுச்சேரியில் சாலை மற்றும் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்குத் தடை உள்ளது. இருப்பினும் அரசியல் கட்சிகள் பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி நகரம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் தடையை பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாள் வாழ்த்து பேனர்களை வைத்துள்ளனர்.

இதனிடையே 100 அடி சாலையில் வைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் பேனர் ஒன்று அறுந்து சாலையில் விழுந்துள்ளது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர் மீது அந்த பேனர் விழுந்ததில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அடுத்து, இந்த தற்போது வைரலாகி வருகின்றது. இப்படி பேனர் வைத்து விபத்தை ஏற்படுத்தி வருவதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், பா.ஜ.கவினர் தடையை மீறி புதுச்சேரியில் பேனர் வைப்பது வழக்கமாகி உள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது சமூக அமைப்புகள் ஏதேனும் போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த நேரத்தில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சுற்றறிக்கை வெளியிட்டு, இரண்டு நாட்களுக்கு நகராட்சி ஊழியர்கள் மூலமாகப் பேனர்களை அப்புறப்படுத்துகின்றனர்.

இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே புதுச்சேரியில் பேனர்கள் வைப்பதை முற்றிலுமாக அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Also Read: சத்தீஸ்கர் :ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணமகன், மணமகள்.. திருமண வரவேற்பில் போது நடந்த சோகம் !