India

ஏய் எப்புட்றா.. இரவோடு இரவாக கர்நாடக அரசு பேருந்தை தெலங்கானாவுக்கு திருடிச் சென்ற மர்ம கும்பல்!

நகை, பணம், செல்போன், சாக்லேட் திருட்டு போன்ற பல திருட்டு சம்பவங்களை பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அரசு பேருந்து ஒன்று திருடப்பட்டுள்ளது என்று கேள்வி பட்டிருக்கிறோமா?. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்திற்கு உட்பட்ட சின்சொலி நகரில் பேருந்து நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அப்போது, பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KA 38 F 971 பதிவு எண் கொண்ட அரசுக்கு சொந்தமான நகரப் பேருந்து காணாமல் போனதை கண்டு அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பேருந்து நிறுத்தத்தை சுற்றி தேடிபார்த்து பேருந்து கிடைக்கவில்லை.

பின்னர்தான் பேருந்தை மர்ம நபர்கள் யாரோ ஓட்டிச் சென்றுள்ளனர் என்று தெரியவந்து. இதையடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்துள்ளனர். அப்போது மர்ம நபர்கள் பேருந்தை ஓட்டி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த சிசிடிவி காட்சியை வைத்துக் கொண்டு போலிஸார் நகரை சுற்றி உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருடிச் செல்லப்பட்ட பேருந்து சின்சொலி நகரில் இருந்து மிரியானா, தண்டூரா பகுதிகளை கடந்து தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது

இதையடுத்து, அரசு பேருந்தை தெலங்கானா மாநிலத்திற்கு திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க கர்நாடக தனிப்படை போலிஸார் அங்கு விரைந்துள்ளனர். அரசு பேருந்து திருடப்பட்டள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வர்ணனையாளர் டு பிளேயர்.. DY பாட்டில் கோப்பையில் 38 பந்தில் 75 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக் !