India

விஷவாயு தாக்கி 7 பேர் பலி.. 10 நாட்களுக்கு முன்பு புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு நடந்த துயரம்!

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்திற்குட்பட்ட பெத்தாபுரம் மண்டலம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சுப்பண்ணா. இந்த ஆலை கடந்த ஓராண்டுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது 7 தொழிலாளர்கள் ஆயில் டேங்கரை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஆயில் டேங்கரில் விஷவாயு தாக்கியுள்ளது. இதனால் வேலை பார்த்துக் கொண்டிருந்த 7 தொழிலாளர்களும் மூச்சுத்திணறி ஒருவர் மாறி ஒருவர் மயங்கி கீழே விழுந்தனர். இதைப்பார்த்து மற்ற தொழிலாளர்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இறந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்தபோது கிருஷ்ணா, நரசிம்மம், சாகர், பாஞ்சி பாபு, கர்ரி ராமராவ், ஜெகதீஷ் மற்றும் பிரசாத் ஆகியோர்தான் உயிரிழந்தது என்பது தெரியவந்தது.

மேலும் உயிரிழந்த இவர்கள் 7 பேரும் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தொழிற்சாலையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பைக் கொடுக்காததாலே விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தொழிற்சாலையின் உரிமையாளர் சுப்பண்ணாவிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: நீதிமன்றத்திற்குள் புகுந்து பொதுமக்களை வேட்டையாடிய சிறுத்தை.. 15 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ!