India

“இங்கே உட்கார உங்களுக்கு அனுமதி இல்லை..” -ஜோடியிடம் GPAY மூலம் 1000 அபராதம் விதித்த அதிகாரி அதிரடி கைது!

நாடெங்கிலும் சுற்றுலா பகுதி அதிகமான இடங்களில் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும், அருவி, பூங்கா, ஏரி, குளம், மியூசியம் போன்ற ஏதேனும் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து மகிழும் வண்ணமாக இருக்கும்.

இதற்காக சில மாநில அரசு சுற்றுலாத் துறைக்கு என்றே தனியாக பட்ஜெட்டும் ஒதுக்குகிறது. மேலும் நாட்டின் வருவாய், மாநிலத்தில் வருவாயில் ஒரு பங்கு சுற்றுலாத்துறை மூலமாக கிடைக்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் அந்தந்த இடங்களையும் சார்ந்தவர்களும் சில நேரங்களில் குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றி பார்க்க அந்தந்த பகுதியில் இருக்கும் சில இடங்களுக்கு செல்வர்.

அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூருவிலுள்ள குண்டலஹள்ளி என்ற ஏரியை தனது ஆண் நண்பரோடு பார்வையிட சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்திருந்துள்ளனர். இதனை கண்ட ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர், அங்கே வந்து இருவரிடமும் விசாரித்துள்ளார்.

மேலும் அவர்கள் இங்கே இருக்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். அதோடு முறையான அனுமதி பெறாமல் அங்கே அமர்ந்திருந்ததால் அவர்களிடம் 1000 ரூபாய் அபராதம் கேட்டுள்ளார். இருவரிடம் கையில் பணம் இல்லை என்பதால் GPAY செலுத்த வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியின்றி, அவர்களும் பணம் செலுத்தியுள்ளனர்.

இதுக்குறித்து பாதிக்கப்பட்ட அர்ஷா லத்தீஃப் என்ற பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனவரி 29 ஆம் தேதி குண்டலஹள்ளி ஏரியை பார்வையிட எனது ஆண் நண்பருடன் சென்றேன். அங்குள்ள பூங்காவில் நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த போது, அப்போது மஞ்சுநாத் ரெட்டி என்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் அங்கு வந்து தனிமையில் இருந்த எங்களை விசாரித்ததார்.

மேலும் அங்கு உட்கார அனுமதி இல்லை எனக் கூறி, எங்கள் இருவரையும் படம் பிடித்து துன்புறுத்தத் தொடங்கினார். ஆனால் அங்கு பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தது. மஞ்சுநாத் ரெட்டி, எங்கள் இருவரின் வேலைகள், சொந்த ஊர், வருகையின் நோக்கம் குறித்து விசாரிக்கத் தொடங்கினார், மேலும் நாங்கள் அவருடன் காவல் நிலையத்திற்கு வந்து அனுமதியின்றி பூங்காவில் 'உட்கார்ந்த' காரணத்திற்காக அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்து ரூ.1000 பணத்தை பெற்றார்.

நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று நாங்கள் கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. இத்தகைய நடத்தையால் முற்றிலும் திகைக்கிறேன். உண்மையில் எந்தத் தவறும் செய்யாததற்காக நாம் ஏன் இந்த காவல்துறையின் இந்த நடவடிக்கையை சகித்துக்கொள்ள வேண்டும்?” என குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவுடன் சேர்ந்து காவலரின் வண்டி எண் தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் மஞ்சுநாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மஞ்சுநாத் ரெட்டி ஒரு காவல்துறை அதிகாரி அல்ல என்றும், அவர் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே எனப்படும் ஊர்காவல் படையை சேர்ந்தவர் ஆவர் என்றும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 8 வாரம் முதல் 1 வருடம் வரை.. இந்தியாவில் பிரபல கார்களின் காத்திருப்பு காலம் எவ்வளவு என்று தெரியுமா ?