India

“மோடி அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.. இது துரோகம் இழைக்கும் இரக்கமற்ற பட்ஜெட்” : ப.சிதம்பரம் சாடல் !

2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட் என்று பாராட்டியுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டும் வழக்கம் போல பெருமுதலாளிகளின் நலனை மனத்தில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஏழை, நடுத்தர மக்களின் சுமையை, வேலையின்மையை, விலைவாசி உயர்வை மேலும் அதிகரிக்கவே இந்த பட்ஜெட் வழி வகுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர். “வளர்ந்த இந்தியாவின் மகத்தான நோக்கத்தை நிறைவேற்ற இந்த பட்ஜெட் வலுவான அடித்தளத்தை உருவாக்கும். இந்த பட்ஜெட் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்ஜி மற்றும் அவரது குழுவை நான் வாழ்த்துகிறேன். இது வரலாற்று பட்ஜெட்” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, திரிணா முல் காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்கள், இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், “மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை பா.ஜ.க உணர்ந்துக்கொள்ளவில்லை. இந்த பட்ஜெட் ஏழைமக்கள், வேலையின்றி உள்ள இளைஞர்கள், வேலை இழந்த தொழிலாளர்கள் வரிசெலுத்துவோர், இல்லத்தரசிகள் போன்ற சாமானியர்களுக்காக பட்ஜெட் அல்ல.

இது முற்றிலும் பெரும்பான்மை மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம். இதனால் ஏழை பணக்காரர்கள் இடையான பொருளாதார இடைவெளி மேலும் அதிகரிக்கும். இது ஒரு இரக்கமற்ற பட்ஜெட். மேலும் எந்த வரியும் குறைப்பதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

ஆனால், புதிய வரிகள் மட்டும் திணிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவே இல்லை. ஆனால் ‘ஏழை’ என்ற வார்த்தையை கருணை அடிப்படையில் இரண்டு முறை பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் மோடி அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை இந்தியர்கள் உணர்ந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஒன்றிய பட்ஜெட் 2023 -2024 .. எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் விலை உயர்வு? விலை குறைப்பு?.. முழு விவரம்!