India

ஆன்லைன் வகுப்பின்போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட உ.பி ஆசிரியர்.. பயங்கர சம்பவத்தின் பின்னணி என்ன ?

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் யாதவ். 35 வயதாகும் இவர், தனியார் பள்ளி ஒன்றில் இந்தி மற்றும் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே வேளையில் வீட்டிற்கு வந்து அருகிலிருக்கும் மாணவர்கள், வகுப்பு மாணவர்கள் என பலருக்கும் டியூசன் எடுத்து வருகிறார். நேரடியாக மாணவர்கள் வர இயலவில்லை எனில், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் டியூசன் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் தனது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் டியூசன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். ஜூம் (Zoom) செயலி மூலம் மாணவி ஒருவருக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்திருந்த நேரத்தில் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இரண்டு நபர்களும் ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.

தொடர்ந்து இந்த தாக்குதலில் அவரது முகத்தை கழுத்தை அழுத்தியுள்ளனர். மேலும் அவரது கழுத்தை நெரித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டில் இருந்து ரூ.2,300 திருடிச் சென்றுள்ளார்கள்.

இந்த அனைத்து சம்பவங்களும் ஜூம் செயலியில் ஆன்லைன் பாடத்தின்போது பதிவாகியிருந்தது. தொடர்ந்து இதுகுறித்து கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கீழே கிடந்த ஆசிரியரை சோதனை செய்தபோது அவர் உயிரிழந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவரது உடலை மீட்ட அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது, ஜூம் செயலியில் ஆன்லைன் பாடத்தின்போது பதிவாகியிருந்ததைக் கண்டறிந்தனர். அதன் உதவியோடு கொலை செய்தவர்கள் சந்தீப் குமார், ஜக்கா மிஸ்ரா ஆகிய இருவர்தான் என்பதைக் கண்டறிந்து, அவர்களைக் கைதுசெய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, கொலைக்கான காரணத்தை கூறினர். அதாவது ஆசிரியர் கிருஷ்ணகுமாருக்கு சகோதரி ஒருவர் உள்ளார். அவரை இவர்கள் இருவரும் வழிமறித்து தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியரிடம் அவரது சகோதரி தெரிவிக்க, உடனே இவர்களிடம் போய் மிரட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் இவரை வீடு தேடி வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் ஆத்திரம் முற்றிப்போய் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். ஆன்லைன் வகுப்பின்போது நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Clubhouse செயலியில் 14 வயது சிறுமியிடம் ஆபாச சாட்டிங்.. வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!