India

“எனக்கு இவங்கதான் ரோல் மாடல்..” - இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமிய பெண்.. யார் இந்த சானியா மிர்சா?

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா என்ற இளம்பெண். இவரது தந்தை ஷாகித் அலி ஒரு டி.வி., மெக்கானிக் ஆவார்.

சிறுவயதில் இருந்தே சாதிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்த சானியா, வளர வளர போர் விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்காக முழு ஈடுபாட்டுடன் பள்ளி, கல்லூரி முடித்த இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு தீவிரமாக படித்தார்.

தாய் மொழி (இந்தி) கல்வி வழியில் மட்டுமே பயின்ற இவர், தனது கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆரம்ப கல்வி முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தார். 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அதன் பிறகு, அவர் நகரில் உள்ள குருநானக் பெண்கள் கல்லூரிக்கு சென்றார்.

அவ்னி சதுர்வேதி (Avani Chaturvedi) - இந்தியாவின் முதல் பெண் போர் விமானி

தனது ரோல் மாடலாக இந்தியாவின் முதல் பெண் போர் விமானி அவ்னி சதுர்வேதியை கருதுகிறார். தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு தயாராகி வந்த இவர், அண்மையில் நடைபெற்ற தேர்வில் 149-வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில், ஆண் மற்றும் பெண் உட்பட மொத்தம் 400 இடங்கள் இருந்தன. பெண்களுக்கு மொத்தமாக 19 இடங்களும், அதில் போர் விமானி பிரவில் இரண்டு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு இடங்களில், சானியா தனது திறமையின் மூலம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து சானியா கூறுகையில், "இந்தி மீடியம் படிக்கும் மாணவர்களும் உறுதியுடன் இருந்தால் வெற்றி பெறலாம். புனே கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி இணையவுள்ளேன். எனது பெற்றோரும், செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியும்தான் எனது வெற்றிக்கு முழு காரணம்.

தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில் போர் விமானிகளில் பெண்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முயற்சியில் என்னால் சீட்டை பெற முடியவில்லை. ஆனால் எனது இரண்டாவது முயற்சியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது" என்றார்.

மகளின் வெற்றியை குறித்து தாய் கூறுகையில், "எங்கள் மகள் எங்களையும் ஒட்டுமொத்த கிராமத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார். போர் விமானி ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றியுள்ளார். அவர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் அவர்களின் கனவுகளைப் பின்பற்றத் தூண்டினார்" என்றார்.

Also Read: இன்று 107 வது நாள்.. 9 மாநிலங்களை கடந்த பயணம்: ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்ற கனிமொழி MP!