India

ஓடும் காரில் தாயின் கையில் இருந்து விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. பாலியல் அத்துமீறல்தான் காரணமா ?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள நாலாசோபாரா என்ற பகுதியை சேர்ந்தவர் சோனக்ஷி. 19 வயது இளம்பெண்ணான இவருக்கு திருமணமாகி 10 மாதத்தில் கை குழந்தை (பெண்) உள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இவர் தனது குழந்தையை கூட்டிக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு வாடகை டாக்சியில் சென்றுள்ளார்.

அது ஷேர் டாக்சி என்பதால் இவர் ஓட்டுநர் அருகே இருக்கும் சீட்டில் இவர் அமர்ந்துள்ளார். மேலும் பின்னால் மூன்று பயணிகள் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பின்னால் இருந்த பயணிகள் இறங்கிய பிறகு, சிறிது நேரத்தில் சோனக்ஷி கையில் இருந்த குழந்தை தவறி வெளியே விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை கண்டு பதறி போன தாய், கார் நிற்பதற்குள் டாக்சியில் இருந்து குதித்துள்ளார்.

கீழே விழுந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் கீழே விழுந்த பெண்ணுக்கும் தலையில் அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின், இது குறித்து காவல்துறைக்கும் தகவல்கள் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், முதலில் டாக்ஸியிலிருந்த 3 பயணிகள் இறங்கிய பிறகு ஓட்டுநர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதனால் பயத்தில் குழந்தையுடன் காரில் இருந்து வெளியில் குதித்தாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் சிறிது நேரத்திலே, குழந்தை கைத்தவறி விழுந்ததாகவும், அதை காப்பாற்ற தானும் குதித்தாகவும் தெரிவித்தார். மாறி மாறி வாக்குமூலம் அளித்துள்ளதால் காவல்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர். இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் விஜய் என்பவரையும் பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், "சோனாக்ஷி தனது கணவருக்கு போன் செய்யும்படி என்னிடம் கேட்டார். அவர் சொன்ன நம்பருக்கு டயல் செய்ய முயன்ற போது 9 நம்பர்களையே கொடுத்தார். உடனே நம்பரை சரிபார்க்கும்படி கேட்டேன். அவரும் போன் நம்பரை சரி பார்த்தபோது மடியில் இருந்த குழந்தை தவறி வெளியில் விழுந்துவிட்டது. காரை நிறுத்துவதற்கும் அவரும் கதவை திறந்து வெளியே குதித்தார்" என்றார்.

இருவரது பதிலும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் டாக்சியில் இருந்து கீழே விழுந்த 10 மாத கை குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: SLOW POISON கொடுத்து கணவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: மனைவி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!