India

கேரளாவில் வெடிக்கும் ஆடை விவகாரம் : Leggings அணிந்து வந்த ஆசிரியையை வசைபாடிய தலைமை ஆசிரியை..

கேரளா மலப்புரம் பகுதியில் அரசுப்பள்ளி ஒன்று அமைந்திருக்கிறது. பல்வேறு மாணவர்களும் படிக்கும் இந்த பள்ளியில் சரிதா என்பவர் இந்தி ஆசிரியராக வருகிறார். இவர், சம்பவத்தன்று பள்ளிக்கு டாப், ஷால், லெகிங் உடை அணிந்து சென்றுள்ளார்.

அப்போது தலைமை ஆசிரியர் அறைக்கு வகுப்பின் பதிவேடு (attendance) எடுக்க சென்றார். அந்த சமயத்தில் இந்த ஆசிரியையின் உடையை கவனித்த தலைமை ஆசிரியை ரம்லாத், இவரது ஆடை குறித்து வசைபாட தொடங்கியுள்ளார். மேலும் "லெக்கிங் ஆடை எதற்கு அணிந்து வந்தீர்கள்? நீங்கள் இப்படி செய்வதால் தான் மற்ற மாணவிகள் ஒழுங்கீனமாக இருக்கின்றனர். பள்ளிக்கு லெக்கின்ஸ் அணிந்து வந்தது தவறு" என்று அவரது மனம் நோகும்படி கடுமையாக வசைபாடியுள்ளார்.

அனைவரது முன்பு இது போன்று ஆசிரியை திட்டு வாங்கியதால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட இந்தி ஆசிரியை இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் தலைமை ஆசிரியை தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், புடவை அணியும் ஆசிரியர்கள் நல்லவர்கள் என்றும், லெக்கின்ஸ் மற்றும் டாப்ஸ் அணிபவர்கள் கெட்டவர்கள் என்றும் நினைக்கிறார்களா என்றும் கேள்வியையும் குறிப்பிட்டிருந்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆசிரியருக்கு ஆதாரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை கூறுகையில், "சம்பவம் நடந்த காலை நான் கையெழுத்திட தலைமை ஆசிரியை அறைக்கு சென்றேன். அப்போது பள்ளி மாணவர் ஒருவர் சீருடை அணிந்துவரவில்லை. அது தொடர்பான பிரச்னை குறித்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எனது உடையை கண்ட அவர், ஆசிரியர்கள் இதுபோல் செய்வதால் தான் மாணவர்களும் செய்வதாகவும், லெகிங் போட்டு வந்தது தவறு என்றும் அனைவர் முன்பும் சரமாரியாக பேசினார்.

மேலும் எனது கலாச்சாரம் குறித்து அவரது பேச்சு இருந்த தாக்கி இருந்தது. ,மற்ற ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிவது பிரச்னையில்லாத போது நான் ஏன் லெகிங்ஸ் அணிவது குறித்து ஆசிரியை கேள்வியெழுப்புகிறார். நான் சட்டப்படி அணியக்கூடியதை மிகவும் கண்ணியமாக அணிந்திருந்தேன். நான் மனதளவில் மிகவும் சோர்ந்து காலை முழுவதும் அழுது கொண்டிருந்தேன்" என்று உருக்கமாக தெரிவித்தார்.

Also Read: 'நீ வெளியே போ'.. முன்பதிவு பெட்டியில் அமர்ந்து வட மாநிலத்தவர்கள் அட்டூழியம்: வேடிக்கை பார்த்த ரயில்வே!