India
தலைமை தேர்தல் ஆணையர் தேர்வில் பெரும் குறைபாடு உள்ளது -முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கண்டனம் !
ஒன்றிய அரசு நியமித்த தலைமை தேர்தல் தேர்தல் ஆணையர் நியமனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி இதுகுறித்து தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "உலகிலேயே தேர்தல் நடத்தும் அமைப்புகளில் அதிக அதிகாரமும், பலமும் கொண்டது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால், அதன் ஆணையரை தேர்வு செய்வதில் பெரும் குறைபாடு உள்ளது. மற்ற நாடுகளில் உள்ளது போல் தேர்தல் ஆணையரை நியமிப்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. யார் தேர்தல் ஆணையர் என்பதை பிரதமர் முடிவு செய்கிறார்.
குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுக்கிறார். அதனால்தான் அண்மையில் நடந்த நியமனம் கூட பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் முதல் மூன்றாவது தேர்தல் ஆணையர் பணியிடம் ஆறுமாதமாக காலியாக இருந்தது.
குஜராத், இமாச்சல் தேர்தல் அறிவித்த நேரத்தில் கூட மூன்றாவது ஆணையர் பதவியை அரசு காலியாகவே வைத்திருந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தவுடன் 12 மணி நேரத்தில் நியமனம் நடத்துகிறார்கள். அதனால்தான் உச்ச நீதிமன்றம் கடுமையாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய தேர்தல் நடத்தும் முறைக்கு உலக அளவில் நன்மதிப்பு உள்ளது. ஆனால், அதன் தலைமையை முடிவு செய்வதில் பெரும் குறைபாடு உள்ளது. பாகுபாடு இல்லாத நியமனம் நடைபெற வேண்டுமானால் சி.வி.சி நியமன முறைபோன்று எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் கீழ் ஆயிரத்துக்கும் குறைவான நிரந்தர ஊழியர்கள்தான் உள்ளனர். ஆனால், தேர்தல் நடத்த பயிற்சி பெற்ற ஒரு கோடியே இருபது லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இந்த நடைமுறை பலமானது. அதனை வழிநடத்தும் தலைமை சுதந்திரமாக செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பாரபட்சமில்லாத, நேர்மையான தேர்தலை உறுதிசெய்ய முடியும்.
தற்போது தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான பொது நல வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம் மாற்றதுக்கான உத்தரவை பிறப்பிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!