India
போதைக்கு அடிமை : 'யாவரும் நலம்' பட பாணியில் குடும்பத்தையே கொடூரமாக கொன்ற இளைஞர்.. டெல்லியில் அதிர்ச்சி !
மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த இளைஞர், மீண்டும் போதை மருந்தை உட்கொண்டு தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே கொடூர முறையில் கொலை செய்துள்ளது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் கேசவ் என்ற 25 வயது இளைஞர் ஒருவர், தனது பெற்றோர், தங்கை, பாட்டி என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர் போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் இவருக்கும், இவரது குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் தங்கள் மகனை முழுவதுமாக போதை பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளியே கொண்டு வர குடும்பமே சேர்ந்து அவரை அந்த பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியுள்ளனர். அங்கே இவர் சரியாகி விட்டதாக கூறி அண்மையில் வெளியே வந்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் ஒரு வேலைக்கும் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த வேலையில் அவரால் நீடிக்க முடியவில்லை என்பதால் கடந்த மாதம் வேலையையும் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் அவர் போதை பழக்கத்தை தொடங்கினார். எனவே மீண்டும் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். தொடர்ந்து இவர்களுக்குள் இதனால் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கடும் கோபம் கொண்ட கேசவ், சம்பவத்தன்று இரவு போதையில் இருந்தபோது, தனது பெற்றோரிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு அருகில் இருந்த கத்தியை எடுத்து அவர்களை குத்தி, அவர்களது கழுத்தையும் கொடூரமாக அறுத்து கொன்றுள்ளார்.
பெற்றோரை கொன்றது மட்டுமல்லாமல் தனது பாட்டி மற்றும் சகோதரியையும் அதே முறையில் கொன்றுள்ளார். வீட்டில் அனைவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், போதையில் கோரமாக இருந்த கேசவை கைது செய்தனர். மேலும் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "கேசவ் தனது குடும்பத்தை போதையில் கொடூரமாக கொன்றுள்ளார். இந்த கோர நிகழ்வில் அவரது தந்தை தினேஷ் (50), தாய் தர்ஷனா, பாட்டி தீவானா தேவி (75), தங்கை ஊர்வசி (18) ஆகியோர் சம்பவம் இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். குறிப்பாக இளைஞரின் பெற்றோர் குளியல் அறையிலும், பாட்டி மற்றும் சகோதரியின் சடலம் படுக்கை அறையிலும் இருந்து மீட்கப்பட்டது.
கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை அண்டை வீட்டார்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தற்போது அவர் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !
-
தென்காசியில் 2.44 லட்சம் பயனாளிகளுக்கு உதவிகள் – முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் என்னென்ன?