India

“எனக்கு Doctor கிட்னி தான் வேண்டும்..” -பீகாரில் கிட்னி திருடப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை!

வயிற்றுவலி என்று மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கிட்னி திருடப்பட்டுள்ள சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் நகரைச் சேர்ந்தவர் சுனிதா தேவி (வயது 38). இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுவலி ஏற்படுள்ளது. எனவே அருகிலிருந்த தனியார் நர்சிங் ஹோமிற்கு சென்று அணுகினார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர், இவருக்கு கர்ப்பப்பை கோளாறு இருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

இதனால் இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது இரண்டு கிட்னிகளும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தனது கிட்னிகள் திருடப்பட்டிருப்பதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் சுனிதா பின்னர் பாட்னாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்துக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே கிட்னி திருடப்பட்ட விவகாரம் குறித்து சுனிதா காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பெரிதானதையடுத்து மருத்துவரும் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து மருத்துவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுனிதாவுக்கு தற்போது தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு விரைந்து கிட்னி கிடைக்க ஐ.ஜி.ஐ.எம்.எஸ்-ஸில் பதிவுசெய்துள்ளதாகவும், கிடைத்தவுடன் விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோக சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சுனிதா கூறுகையில், "நான் வயிறு வலி என்று தான் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் மருத்துவரோ எனது கர்ப்பப்பையில் பிரச்னை இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்து 2 கிட்னிகளை திருடி விட்டார்.

எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக நான் உயிரோடு நலமாக இருக்க வேண்டும். எனது கிட்னியை திருடிய மருத்துவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். மாற்று அறுவை சிகிச்சைக்காக அவரது கிட்னி எனக்கு வேண்டும். இது போல் ஏழை மக்களின் வாழ்வில் பிரச்னை செய்யும் மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Also Read: 59 வயதில் விவாகரத்து.. 69 வயதில் திருமணம்.. -‘லோக் அதாலத்’ முறையால் மீண்டும் இணைந்த தம்பதி.. நெகிழ்ச்சி!