India

“இதற்கு குணப்படுத்தும் சக்தி இல்லை..” - பதஞ்சலியின் 5 மருந்து பொருட்களுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு !

பதஞ்சலியின் 5 மருந்துப் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரகண்ட் மாநில ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் 'பதஞ்சலி' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த பதஞ்சலி நிறுவனத்தில் பல்வேறு பொருட்களும் கிடைக்கும். இந்த நிறுவனத்தின் கீழ் திவ்யா பார்மசியின் - மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட் மற்றும் லிப்பிடோம் (Madhugrit, Eyegrit, Thyrogrit, BPgrit and Lipidom) ஆகிய மருந்து பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த 5 மருந்து பொருட்களின் உற்பத்தியும் நிறுத்துமாறு உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஏனென்றால் இந்த 5 மருந்து பொருட்களும் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, குளுக்கோமா எனும் கண் நோய், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றை குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அந்த மருந்து பொருட்களை ஆய்வு செய்ததில், அதற்கு அதனை குணப்படுத்தும் சக்தி இல்லை என்பது தெரியவந்தது. எனவே குறிப்பிட்ட இந்த 5 மருந்து பொருட்களுக்கு பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தியதால் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திவ்யா பார்மசிக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் இந்த மருந்துகள் மூலம் குறிப்பிட்ட நோய்களில் இருந்து மீண்டு வரலாம் என்பதை சுட்டிக்காட்டி, இந்த மருந்துகளின் தயாரிப்பை மதிப்பாய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கும்வரை, 5 மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Also Read: ராஜீவ் காந்தி கொலை வழக்கு : 31 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பெரும் விடுதலை !