India

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்-க்கு கிட்னியை கொடுக்க முன்வந்த மகள்.. தந்தைக்கு மகள் செய்த கடமை!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஆர்.ஜே.டி கட்சியின் நிறுவனத் தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவருக்கு வயது முதிர்வு ஏற்பட்டதை அடுத்து அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கட்சிக்குத் தலைவராக பொறுப்பேற்று தற்போது துணைமுதலமைச்சாராகவும் உள்ளார்.

அண்மையில் பா.ஜ.க வுடன் நிதிஷ்குமார் கூட்டணியை முறித்துக்கொண்டு ஆர்.ஜே.டியுடன் புதிய கூட்டணி வைத்து தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ்வும் பதவியேற்றனர். இதையடுத்து தற்போது பீகாரில் ஆர்.ஜே.டி, ஜே.டி.யு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கடந்த சில மாதங்களாகவே உடல் நிலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து சிறுநீரக பிரச்சனை காரணமாக உயர் சிகிச்சை பெற அண்மையில் அவர் சிங்கப்பூர் சென்றார். அங்குச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி ஓய்வெடுத்து வந்தார். பிறகு மீண்டும் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பிறகு சிகிச்சைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து தனது தந்தைக்கு தானே கிட்னியை கொடுப்பதாக அவரது இரண்டாவது மகள் ரோகினி ஆச்சாரியா கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய ரோகினி ஆச்சாரியா "ஆம், அது உண்மைதான். நான் விதியின் குழந்தை, என் சிறுநீரகத்தை அப்பாவுக்குக் கொடுப்பதில் பெருமைப்படுகிறேன்" தெரிவித்துள்ளார். இதையடுத்து லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.

Also Read: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் IT பூங்காக்கள் அமைக்கப்படும் ! அமைச்சர் தங்கம் தென்னரசு !