India

5 ஆண்டுகளில் காணாமல்போன 12 பெண்கள் நரபலியா?.. மீண்டும் விசாரணை தொடங்கிய கேரள போலிஸ்!

கேரள மாநிலம் கொச்சி, பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் பகவந்த் சிங் - லைலா தம்பதியினர். இவர்களுக்கு முகநூல் மூலம் முஹம்மது ஷாஃபி என்ற போலி மந்திரவாதி அறிமுகமாகியுள்ளார். அந்த முஹம்மது ஷாஃபி இவர்களிடம், விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் ஒரு பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என்றும், அதற்கான பெண்ணை தானே கூட்டி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோஸ்லி என்ற பெண்ணை அணுகியுள்ளார். அவரிடம் பணத்தாசை காட்டி ஏமாற்றி பத்தனம்திட்டாவிற்கு அழைத்து வந்து நள்ளிரவில் நரபலி கொடுத்துள்ளனர். அதேபோல், தமிழ்நாடு, தர்மபுரியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணை தோட்ட வேலைக்கு அழைத்து வந்து அவரையும் நரபலி பலி கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலிஸார் தம்பதியனர் மற்றும் மந்திரவாதி முஹம்மது ஷாஃபி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் இரண்டு பெண்களை உயிருடன் கை கால்களை கட்டி, நரபலி கொடுத்து, துண்டு துண்டாக வெட்டி பச்சையாக சாப்பிட்டால் ஆயுள் கூடும் என்று மந்திரவாதி முகமது சொன்னதாகவும், ஆனால் பச்சையாக சாப்பிட விருப்பமில்லாமல் அதனைச் சமைத்துச் சாப்பிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இந்த நரபலி சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மீண்டும் போலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதனால் மந்திரவாதி முஹம்மது ஷாஃபி இதுவரை யார் யாரை எல்லாம் நரபலி கொடுத்துள்ளார் என்பது குறித்தும் காணாமல் போன பெண்களுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: 2 பெண்கள் நரபலி.. பிணத்தை சாப்பிட்ட தம்பதி.. பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் அரங்கேறிய கொடூரம் !