India

பீகார் : தவறான ஊசி செலுத்தப்பட்டதால் பறிபோன கை.. காது வலிக்காக சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ரேகா. இவருக்கு சில நாட்களாக காதில் வலி இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் அந்த பகுதியில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் சென்று பரிசோதித்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதன்படி கடந்த ஜூலை 11ம் தேதி காது அறுவை சிகிச்சைக்கு வந்த ரேகாவுக்கு அங்குள்ள செவிலியர் ஊசி ஒன்றினை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் ரேகாவின் கையில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும், சிறிது நேரத்தில் முழுவதுமாக நீல நிறமாக மாறியுள்ளது. இது தொடர்பாக செவிலியரிடம் அவர் கூறிய நிலையில் அதை அவர் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் படி கூறியுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் கையின் நிறம் கருப்பு நிறமாக மாறிய நிலையில், ரேகாவுக்கு தாங்க முடியாத வலியும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐஜிஐஎம்எஸ் என்ற மருத்துவமனைக்கு சென்று அங்கு மருத்துவர்களிடம் கலந்தாலோசித்துள்ளார்.

அங்கு அவருக்கு கையை நீக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி அவரின் கையும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நடக்கவிருந்த திருமணமும் நின்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனினும் இது தொடர்பாக வழக்கு ஏதும் போலிஸார் பதியவில்லை என ரேகாவின் சகோதரி கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும், குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வருவதாகவும் ரேகாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Also Read: உ.பி :கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. பெண்ணின் தங்கை வந்ததால் தப்பிய உயிர் !