India

பட்டியல் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் தொட்ட உடலை வாங்க மறுத்த குடும்பம்: ஒடிசாவில் நடந்த தீண்டாமை கொடுமை!

இந்தியா பல துறைகளில் வளர்ச்சி பெற்று வந்தாலும் இன்னும் பட்டியல் இன மக்கள் தொடர்ந்து தீண்டாமை கொடுமைகளைச் சந்தித்தே வருகின்றனர். குறிப்பாக உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் தீண்டாமை கொடுமை சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.

அண்மையில் கூட கர்நாடகாவில் இந்து கடவுளின் சிலையைத் தொட்டதற்காகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்திற்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்த உடலைத் தொட மறுத்து உறவினர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்காத சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம், பாதம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முச்சுனு. இவரது கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முச்சுனு உயிரிழந்துள்ளார். இதையடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடல் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தினர் முச்சுனு உடலை வாங்க மறுத்துள்ளனர்.

இதனால் அவரது உடலை எடுத்து வந்த ஆம்புன்ஸ் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அவர்கள் உறவினர்களிடம் கேட்டபோது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்ததால் அவரது உடலை நாங்கள் தொட மாட்டோம், நீங்களே உடலை அடக்கம் செய்து விடுங்கள் என கூறியுள்ளனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்களே முச்சுனு உடலைத் தகனம் செய்துள்ளனர். தகனம் செய்வதற்கு முன்பு அவரது உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ம.பி : பிறந்து 20 நாட்களே ஆன இரட்டை குழந்தைகள்.. கழுத்தை நெரித்து கொன்று வீசிய கொடூர தாய்.. பின்னணி என்ன?