India

பெற்ற மகள்கள் மீது கொடூர தாக்குதல்.. வீடியோ எடுத்து மனைவிக்கு மிரட்டல் விடுத்த கணவன்.. ஆந்திராவில் கோரம்!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியிலுள்ள வீரபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தாவித் - நிர்மலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் இருக்கும் நிலையில் தாவித் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் குடும்பத்திற்கு செலவு செய்யாமல் குடித்தே அழித்து வந்துள்ளார்.

தனது பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டுமென்றும், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிய தாவித்தின் மனைவி நிர்மலா வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி ஏஜென்ட் ஒருவர் மூலம் துபாய்-க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்து சம்பாதித்து பணத்தை வீட்டிற்கு அனுப்பி வருகிறார்.

ஆனால் தாவித்தோ தனது மனைவி தான் சம்பாதிக்கிறாளே என்ற எண்ணத்தில் வேறு வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டும் நண்பர்களோடு ஊர் சுற்றியும் பணத்தையும் வீணாக்கி குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தாவித் தனது மனைவி நிர்மலா மீது சந்தேகம் கொள்ளவே, அவரை துபாயில் இருந்து வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு நிர்மலா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தனது மனைவி நிர்மலாவை மீண்டும் ஊர் திரும்ப வைப்பதற்காக திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று அவரது இரண்டு பெண் குழந்தைகளளை சரமாரியாக தாக்கியுள்ளார். அவர்கள் இரண்டு பெரும் குழந்தைகள், அதுவும் பெண்கள் என்று யோசிக்காமல் இருவரையும் கடுமையாக தாக்கி, ஒற்றைக்காலை பிடித்து தலைகீழாக தூக்கி போட்டு சரமாரியாக அடித்துள்ளார். இந்த தாக்குதலை அவரது அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அதனை அவரது மனைவிக்கு அனுப்பி, வீட்டிற்கு வரவில்லை என்றால் குழந்தைகளை அடித்தே கொன்று விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்.

இந்த வீடியோவை கண்டு பதைபதைத்துப்போன தாய் நிர்மலா கதறி அழுதுள்ளார். மேலும் குழந்தைகளை விட்டு விடுமாறு தனது கணவரிடம் கெஞ்சியுள்ளார். இருப்பினும் கணவர் மிரட்டியதால் பயந்துபோன நிர்மலா, அவர் ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு இந்த வீடியோவை அனுப்பி தனது குழந்தைகளை காப்பாற்றுமாறு மன்றாடியுள்ளார்.

அதன் பேரில் அவ்வூரின் பஞ்சாயத்து தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வர் கோட்டு சத்திய நாராயணா-வின் உதவியோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் காவல்துறையினர் தன்னை தேடி வருவதையறிந்த தாவித், தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் குழந்தைகளை மீட்டனர்.

மேலும் இந்த வீடியோ வைரலானதையடுத்து குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தாவித்தை கண்டித்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து குற்றவாளி தாவித்தை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "உங்க APP-ல் பெரிய குறைபாடு இருக்கு.." -தவறை சுட்டிக்காட்டிய மாணவருக்கு ரூ.38 லட்சம் பரிசு கொடுத்த INSTA!