India
ஆங்கிலம், இந்தி தெரியாததால் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. இண்டிகோ நிறுவனத்துக்கு எதிர்ப்பு !
இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருந்தாலும் ஒன்றிய அரசு தொடர்ந்து பிராந்திய மொழிகளை புறக்கணித்து ஒரு சாரார் பேசும் ஹிந்திக்கு மட்டுமே முக்கியத்தும் அளித்து வருகிறது. அரசின் பல்வேறு நிறுவனங்களும் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் சிலவும் அதே வேளையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் இண்டிகோ நிறுவனம் தற்போது மொழி ரீதியிலான சர்ச்சையில் சிக்கியுள்ளது. செப்டம்பர் 17-ம் தேதி அங்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு சென்றுள்ளது.
இந்த விமானத்தில் ஆங்கிலம், இந்தி தெரியாத பிராந்திய மொழியான தெலுங்கு மொழி மட்டுமே பேசும் பெண் ஒருவரும் பயணம் செய்துள்ளார். அந்த விமானத்தில் பணிப்பெண்கள் அவரை கட்டாயப்படுத்தி அவருடைய இடத்திலிருந்து மாற்றி அமரவைத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஆங்கிலம்,இந்தி தெரியாததால் அவருக்கு இந்த துன்பம் நேர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ஆர் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "இண்டிகோ நிர்வாகமே, உள்ளூர் மொழிகளை மதிக்கத் தொடங்குங்கள். ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாத பயணிகளையும் மதிக்கத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிராந்திய வழித்தடங்களில், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற உள்ளூர் மொழி பேசக்கூடிய பணியாளர்களை அதிகம் நியமிக்கவும். இதுதான் ஒரே தீர்வாக இருக்கும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் இண்டிகோ நிறுவனத்தை விமர்சித்துள்ளனர். மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ராவும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். இதனால் இண்டிகோ நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !