India

400 % உயர்ந்த கல்விக்கட்டணம்.. தீப்பந்தங்களுடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் .. உ.பி-யில் பரபரப்பு !

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் அலகாபாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் திடீர் என கல்வி கட்டணங்கள் 400 மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டு நாட்களுக்கு முன், மாணவர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி நடத்தினர். அதில் நேற்று மஞ்சித் படேல் மற்றும் ராகுல் சரோஜ் ஆகிய இரு மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. இதன் காரணமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் மாணவர்களிடையே பரவியதும் மாணவர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்திய கட்டண உயர்வை எதிர்த்தும், மாணவர் சங்கத்தை மீட்டெடுக்கக் கோரியும்,பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து முழக்கமிட்டபடி எரியும் தீப்பந்தங்களை ஏந்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரியும் தீப்பந்தங்களை ஏந்தி பேரணியாக சென்ற மாணவர்கள் சந்திரசேகர் ஆசாத்தின் சிலை முன் திரண்டனர். அங்கு ‘சத்ரசங் சன்யுக்த் சங்கர்ஷ் சமிதி’ என்ற பதாகையின் கீழ் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தியின் ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில் "அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 400% கட்டண உயர்வு பாஜக அரசின் மற்றொரு இளைஞர் விரோத நடவடிக்கை. உ.பி-பீகார் மாநிலத்தின் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இங்கு படிக்க வருகிறார்கள்.

கட்டணத்தை உயர்த்துவதன் மூலம், இந்த இளைஞர்களிடமிருந்து கல்விக்கான முக்கிய ஆதாரத்தை அரசாங்கம் பறிக்கும்.மாணவர்களின் கருத்தைக் கேட்டு, கட்டண உயர்வை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று வலியிறுத்தியுள்ளார்.

Also Read: திருடனை 10 கி.மீ ரயிலின் வெளியே தொங்கவிட்ட பயணிகள்.. உயிர்பயத்தில் கதறியபடி வந்த திருடனின் வீடியோ வைரல் !