India

சார்ஜிங் செய்தபோது செல்போன் வெடித்து விபத்து.. 8 மாத கைக்குழந்தைக்கு நேர்ந்த சோகம் !

உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் காஷ்யப் - குசும் காஷ்யப் தம்பதியினர். கூலி தொழில் செய்து வரும் இவர்களுக்கு அண்மையில் திருமணமாகி தற்போது 8 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று உள்ளது.

சுனில் தனது குடும்பத்துடன் மின் இணைப்பு இல்லாத வீட்டில் வாழ்ந்து வந்தார். எனவே அவர் சூரியஔி தகடு என்று சொல்லப்படும் Solar panel-ஐ பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கி பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சுனில் வழக்கம்போல் தனது மொபைல் போனுக்காக அந்த பேனல் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி சார்ஜ் போட்டுள்ளார்.

6 மாதத்திற்கு முன்பு சுனில் வாங்கியதாக கூறப்படும் மொபைல் போன், பேட்டரி வீங்கிய நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த மொபைல் போனை சார்ஜ் போட்டபோது, பேட்டரி வெடித்து சிதறியது. இதில் வெடித்து சிதறிய பேட்டரி அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவர்களது 8 மாத கைக்குழந்தை மீது பட்டது.

இதில் அந்த குழந்தை மீது சில மின் பாய்ந்ததில் மயக்கமடைந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை தூக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் பேட்டரி வெடித்து 8 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: AIR INDIA EXPRESS விமானத்தில் தீ : ஆபத்தில் சிக்கிய பயணிகள்.. துரிதமாக மீட்ட விமான பணியாளர்கள் !