India

இனி வாடகை வீட்டிற்கு 18% GST வரி விதிப்பா?.. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது என்ன?

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் பயன்படுத்தி வரும் அத்தியாவசிய பொருட்களுக்கு எல்லாம் GST வரி விதித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட அரசி, தயிர், கோதுமை மாவு, பருப்பு, உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5% GST வரி விதித்துள்ளது. ஆனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கும் வைரத்திற்கு 5% வரி தான் வித்துள்ளது. இந்த வேறுபாடான GST வரி விதிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அண்மையில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத் தொடரில் கூட உணவுப் பொருட்கள் மீதான GST வரி குறித்து விவாதிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஒன்றிய அரசு இது குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில் வீட்டு வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் , ‘அன்றாட உணவுப் பொருட்களுக்கு GST வரி விதித்த பிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் GST வரி விதிக்கப்பட்டுள்ளது’என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இதற்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு GST வரி வரி கிடையாது. அதேநேரம் வர்த்தக பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத GST வரி விதிக்கப்படும். மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பைத் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தால் GST கிடையாது’ என்று தெரிவித்துள்ளது.

Also Read: அடுத்த ஆண்டு வருகிறது மகளிர் IPL தொடர்.. அணிகளின் எண்ணிக்கை எத்தனை ? கோதாவில் குதிக்கிறதா சென்னை அணி ?