India

'இப்படியாவது என் மகள் இந்த உலகை பார்க்கட்டும்'.. 3 வயது குழந்தையின் கண்ணை தானமாகக் கொடுத்த பெற்றோர்!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஹிமாச்சல பிரதேசம் சிம்லா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மூன்று வயது குழந்தை இருந்தது.

இந்த குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பார்த்து வந்துள்ளனர். பின்னர் சிறுமி ஆராதனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இப்படி அடிக்கடி சிறுமிக்கு உடல் நலக்குறைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து ஆராதனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக பெற்றோர்கள் சிறுமியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் கூறினர்.

பின்னர் சிறுமியின் கண்கள் மட்டும் எடுத்துப் பதப்படுத்தப்பட்டு இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்துப் பெற்றோர்கள் கூறுகையில் தனது குழந்தை வேறு ஒருவர் மூலமாவது இந்த உலகத்தை பார்க்கட்டும் என கூறியது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

Also Read: ஆண்- பெண் முரண் ! காதலுறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் சித்தாந்தத்தின் பங்கு என்ன?