India

கடன் தொல்லை : ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்து வியாபாரி தற்கொலை.. ஆந்திராவில் பரபரப்பு !

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் கிரிதர் வர்மா (வயது 40). தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இவர், சொத்து தொழிலை தொடங்க நினைத்தார். அதற்காக ஃபைனான்சியர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். இந்த கடன் மற்றும் அவரது கையிருப்பு ஆகிய பணத்தை வைத்து ஒரு சிறு வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.

வியாபாரம் கொஞ்சம் நன்றாக போக, வாங்கிய கடனை ஃபைனான்சியரிடம் திருப்பி கொடுத்து வந்துள்ளார் கிரிதர் வர்மா. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வர்மா தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த ஃபைனான்சியர், பணத்தை கேட்டு வர்மாவை தொந்தரவு செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஃபைனான்சியர் போன் செய்யும்போதும், வர்மா அவரது அழைப்பை எடுக்கவில்லை.

இப்படி வர்மா தொடர்ந்து செய்ததால், ஆத்திரப்பட்ட ஃபைனான்சியர், அவரது வீட்டிற்கே சென்று அவரது மனைவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வர்மா மேலும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலை தனது அறையில் இருந்து வர்மா வெளியே வராததால், அவரது மனைவி கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த மனைவி அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார்.

அப்போது வர்மா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டதும் பதறிப்போன அவரது மனைவி அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து தொங்கிய நிலையில் இருந்த வர்மாவின் உடலை மீட்டனர்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் வர்மாவின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையை முழுக்க சோதனையிட்டனர். அப்போது அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கைப்பட எழுதிய கடிதம் ஒன்று அதிகாரிகளுக்கு கிடைத்தது.

அந்த கடிதத்தில், "கடந்த 2010-ம் ஆண்டு, நான் வியாபாரம் நிமித்தமாக ரூ.5 லட்சம் அந்த ஃபைனான்சியரிடம் கடனாக வாங்கினேன். அதை முழுவதுமாக செலுத்தி விட்டேன். ஆனால் ஃபைனான்சியர் மேலும் பணம் கேட்டு என்னை மிரட்டி வருகிறார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த கடிதத்தை அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: சிறந்த ஆசிய திரைப்படம் 'மாமனிதன்'.. - டோக்கியோவில் கோல்டன் விருதை தட்டி சென்ற தமிழ்ப்படம் !