India

கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு.. பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் நடந்த அவலம்!

குஜராத் மாநிலம், அகமதாபாத் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கடந்த 24ம் தேதி சட்ட விரோதமாகக் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கிக் குடித்த பலருக்கு அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 28 பேர் சிகிச்சை பலனின்றி இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இன்னும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து பா.ஜ.க அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அமித் சாவ்தா, "பா.ஜ.க தலைவர்களின் ஆதரவு மற்றும் போலிஸார் உதவியுடனே மாநிலத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது. மேலும் கள்ளச்சாராயம் விற்கும் கும்பலிடம் இருந்து போலிஸார் மாதம்தோறும் லஞ்சம் வாங்கி வருகின்றனர்" என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மது விலக்கு மாநிலம் என்பது குறிப்பிடதக்கது.

Also Read: பரிகாரம் செய்வதாக தாயோடு சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி.. பின்னணி என்ன?