India

பொதுமக்களுக்கு GST உயர்வு.. அம்பானிக்கு ஏற்றுமதி வரி ரத்து.. மோடி அரசின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியதன் பின்னர் ரஷ்யாவின் மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. ரஷ்யா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளராக இருப்பதால் இதன் தொடர்ச்சியாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெயை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் வழங்க மறுத்ததால் அந்நாடு மலிவு விலைக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்வதாக அறிவித்தது. மேலும் போரில் நடுநிலை வகித்த இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க தயார் என்றும் அறிவித்தது.

இதை பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதிலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி குவித்தது.

பின்னர் அதை சுத்திகரிப்பு செய்து உலக நாடுகளுக்கு சர்வதேச சந்தை விலையில் ஏற்றுமதி செய்தது. குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்வதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெரும் லாபம் ஈட்டியது.

அதீத ஏற்றுமதி காரணமாக இந்தியாவில் பெட்ரோல்,டீசல் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய அரசு கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 வரியும், டீசல் லிட்டருக்கு ரூ.13 வரியும் விதித்து உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் லாபம் குறையத்தொடங்கியது.

இந்த நிலையில், விதிக்கப்பட்ட புதிய வரியை ஒன்றிய அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அதிரடியாக 4.25 சதவீதம் உயர்ந்து ரூ.2,545.05 ஆக விற்பனையாகிறது.

வருவாய் பற்றாக்குறை எனக் கூறி பொதுமக்கள் அன்றாடம் வாங்கும் பொருள்களுக்கு GST வரியை உயர்த்திய ஒன்றிய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் குறைகிறது என்பதற்காக விதிக்கப்பட்ட புதிய வரியை ரத்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”உள்ளாடையை அகற்றி குவியலாக போட்டனர்.. கதறி அழுத மாணவிகள்”- நீட் தேர்வு அவலத்தை வெளிப்படுத்திய மாணவி!