India

AC-யில் ஓட்டை போட்டு ரூ.12 கோடியை கொள்ளையடித்த திருடன்.. ICICI வங்கி குடோனில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் டோம்பிவலி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் சேமித்து வைப்பதற்காக மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து தான், அந்த பகுதியில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் காவலுக்கு இரண்டு பேர் தினமும் பணியில் இருந்து வருவர்.

இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி வழக்கம் போல் அங்கு பணி புரிந்து வந்த காவலர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் எதோ கோளாறு ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவர்கள் வங்கி கிளைக்கு தகவல் கொடுக்க, அவர்களும் வந்து சிசிடிவி கேமராவை பரிசோதித்தனர். அப்போது அதிலிருந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் சில காட்சிகளும் அழிக்கப்பட்டிருந்ததும் கண்டறிந்தனர்.

இதையடுத்து பதறி போன வங்கி நிர்வாகிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் அந்த அறையின் லாக்கரில் இருந்த பணத்தை எண்ணி பார்த்தனர். அப்போது ரூ.34 கோடி காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அறையை முழுமையாக சோதனையிட்டதில் அந்த அறையில் இருந்த ஏ.சி.-யில் ஓட்டை போட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கபட்டது.

மேலும் விடாமல் சுற்றி வங்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது, அங்கிருந்த படிக்கட்டு பக்கத்தில் ஒரு சாக்குமூட்டையில் ரூ.22 கோடி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனிடையே அந்த வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த அல்தாப் ஷேக் என்பவர் காணாமல் போயிருந்தார். மேலும் பாதுக்காப்பில் இருந்த இருவரில் ஒருவர் விடுமுறையில் இருந்ததால் இரண்டு நாள் இந்த அல்தாப் ஷேக் மட்டுமே பணியில் இருந்தபோது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, வழக்குப்பதிவு செய்து அல்தாப் ஷேக்கையும், அவருக்கு உதவியவரிகளையும் தீவிரமாக தேடினர். ஒருவழியாக அவர்கள் அனைவரையும் கைது செய்த காவல் அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.5.8 கோடியை மீட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து மீதிப்பணத்தை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ரூ.34 கோடியில் ரூ.22 கோடியை ஏன் அங்கே விட்டு சென்றனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

வங்கி பண குடோனின் ஏசியில் ஓட்டை போட்டு கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதல் தோல்வியால் MBA பட்டதாரிக்கு நேர்ந்த சோகம்!3 ஆண்டுக்கு பின்னர் உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!