India

VIVO தொடர்புடைய 44 இடங்களில் ரெய்டு - 2 இயக்குநர்கள் தப்பியோட்டம்..! மோசடி செய்கிறதா VIVO நிறுவனம் ?

சீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ (vivo), இந்தியாவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கிளைகள் கொண்டுள்ள இந்த நிறுவனத்திற்கு, வாடிக்கையாளர்கள் ஏராளம்.

ஏற்கனவே VIVO Communication நிறுவனம் பல்வேறு நிதி முறைகேடுகள் செய்ததாக புகார்கள் வந்ததையடுத்து கடந்த மே மாதம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் விவோ நிறுவனத்தின் மீது முறைகேடு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், நேற்றைய முன்தினம் அந்நிறுவனத்தை சேர்ந்த 44 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதாவது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், மாகாராஷ்டிரா, இமாச்சலப்பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவோ தொடர்புடைய இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த விவோ விநியோக அமைப்பின் மீது, டெல்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதையடுத்து தொடர் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் விவோ நிறுவனத்தின் இயக்குநர்களான ஹூஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகிய 2 பேரும் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சோதனை அதிரடியாக நடைபெற்று வந்த நிலையில், இயக்குநர்கள் தப்பி சென்றதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி, ஒவ்வொரு மொபைல் போனுக்கும், தனித்தனி IMEI எண் கொடுக்கவேண்டும். ஆனால் விவோ நிறுவனம் 13,500 மொபைல் போனுக்கும் ஒரே IMEI கொடுத்திருந்தது, கடந்த 2020 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச காவல்துறை விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.