India

"எங்களுக்கு தனி மதம் வேண்டும் !" - போர்க்கொடி தூக்கிய பழங்குடியின மக்கள்.. காரணம் என்ன ?

பழங்குடி மக்களை தனி மாதமாக அங்கீகரிக்க வேண்டும் என பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

ஜார்கண்ட், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் என 5 மாநிலங்களில் அதிக அளவில் வசிக்கும் சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல 'சர்னா' மதத்தை சேர்ந்தவர்கள் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த 250 பேர், ஆதிவாசி செங்கல் அபியான் எனும் பழங்குடியினர் அதிகாரமளிக்கும் பிரசாரத்தின் கீழ் `சர்னா' தர்ம நெறிமுறைகளை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசுத் தலைவருக்கு முன்வைத்து டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினர்.

இது குறித்து பேசிய அவர்கள், ஆதிவாசிகளான நாங்கள் இந்துக்களோ அல்லது கிறிஸ்தவர்களோ இல்லை. எங்கள் மத எண்ணங்கள் மற்ற மதங்களிலிருந்து வேறுபட்ட ஒன்று. எங்கள் மதத்தை `சர்னா'-வாக அங்கீகரிக்க வேண்டும்.

இது தொடர்பாக எங்கள் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளை காவல்துறை மூலம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளோம்.அதன்படி வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஆதிவாசிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்யும் விதமாக ஏற்பாடு செய்யவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்" எனக் கூறியுள்ளனர்.

1855-ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிரான சந்தால் கிளர்ச்சியை பழங்குடி மக்கள் நடத்தினர். அதன் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் கூறியுள்ளனர்.

Also Read: அதிமுக ஆட்சியில் 750 கோடி மோசடி - ஊழல்வாதிகளின் சொத்துகள் விரைவில் முடக்கம் - அமைச்சர் பெரியசாமி தகவல்!