India

உளறல் பேச்சால் நாடு தீக்கிரையானது.. நுபுர் சர்மா மன்னிப்புக் கேட்கவேண்டும்: உச்சநீதிமன்றம் கண்டனம் !

நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

மேலும் நுபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் மூண்டது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பல இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டது.

அதேவேளையில் நுபுர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி என்பவர் 2 நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கு அத்தனையும் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும்; தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நுபுர் சர்மாவை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் கருத்து கூறுகையில், ”நுபுர் சர்மாவின் தேவையில்லாத உளறல்களால் நாடு இப்போது தீக்கிரையாகியுள்ளது.

மேலும், நுபுர் சர்மா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளார். உண்மையில் அவருக்கு அச்சுறுத்தலா? இல்லை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? என்று நாம் பார்க்க வேண்டும். நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு இந்தப் பெண் ஒரு தனி நபராகக் காரணமாகியுள்ளார்.

தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா பேசியதை நாங்கள் கண்டோம். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று வேறு அடையாளப்படுத்தியுள்ளார். இது அவமானகரமானது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. பதுங்கி இருந்து மடக்கி பிடித்த போலிஸ் - சிக்கியது எப்படி?