India

தேவாலயத்தில் ஞானஸ்நானம் எடுக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. பதறிப்போன பாதிரியார் !

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேவாலயத்தில், இளைஞர் ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க சென்றுள்ளார். வழக்கமாக கிறிஸ்து முறைப்படி ஞானஸ்நானம் பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அதன்படி தேவாலயத்தில் உள்ள பாதிரியாரும் பெரிய தொட்டிக்குள் புனிதநீர் நிரப்பி இளைஞரை அதற்குள் இறக்க செய்துள்ளார். தொடர்ந்து பாதிரியாரும் ஜெபம் செய்து ஞானஸ்நானம் வழங்கத் தொடங்கினார்.

தன்னுடைய ஜெப போதனை தேவாலயத்திற்கு வந்துள்ள அனைத்து பக்தர்களுக்கும் கேட்க வேண்டுமென்று, அவர் கையிலேயே மைக்கை பிடித்து பேசிக்கொண்டே ஞானஸ்நானம் செய்துகொண்டிருந்தார். தொட்டியில் மூழ்கி இருந்த இளைஞர் எழுந்து நின்றார்.

அப்போது பாதிரியார், தனது கையில் பிடித்திருந்த மைக்குடன் அந்த இளைஞரை பிடிக்க, மைக்கில் உள்ள ஒயர் சரியாக இல்லாத காரணத்தினால் இளைஞரின் ஈரமான உடம்பில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அந்த இளைஞர் தண்ணீருக்குள்ளே தத்தளித்து விழுந்தார். அவருடன் சேர்ந்து ஒயர் பாதித்த மைக்கும் ஸ்டாண்டுன் தண்ணீருக்குள் விழ நிலைமை பதற்றத்திற்குள்ளானது.

இளைஞர் தண்ணீருக்குள் துடிப்பதை கண்ட அவரின் உறவினர்களும், பாதிரியாரும், மற்றவர்களும் பதற்றத்துடன் செய்வதறியாது திகைத்த நின்றனர். இதையடுத்து அருகில் இருந்த ஒருவர் மைக் ஸ்டேண்டை எடுத்து வெளியே எடுக்க முயன்றபோது, மைக் மட்டும் தனியாக கழண்டு மீண்டும் தண்ணீருக்குள் விழுந்தது. இதையடுத்து மற்றொருவர் மின்சாரத்தை துண்டிக்க மின்சாரம் பாய்ந்த இளைஞர் மயக்க நிலைக்கு சென்றார்.

பின்னர் உடனடியாக அந்த இளைஞரை மீட்ட அவரது உறவினர்கள், அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் உயிருடன் நலமாக உள்ளார். ஞானஸ்நானம் எடுக்க வந்த இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததால் இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘எனது கணவர் வாடகைக்கு..’ : குழந்தைகளின் நலனுக்காக மனைவி எடுத்த முடிவு - பிரிட்டனில் விநோதம் !