India

‘போதும் போதும்.. லிஸ்டு பெருசா போகுது..’ : 434 மீட்டர் கடிதம் எழுதிய தங்கை - வாயடைத்து போன அண்ணன் !

கேரள மாநிலம் பீர்மேடு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணபிரசாத். இவருக்கு கிருஷ்ணப்ரியா என்ற ஒரு சகோதரி உள்ளார். அரசு பொறியாளரான இவர், தற்போது திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசித்து வருகிறார். வழக்கமான அண்ணன் தங்கை போல் அடிதடி, சண்டை, அழுகை, பாசம் என்று இவர்களுக்குள் ஒரு பிணைப்பு இருந்தது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் மே 24 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச சகோதரர்கள் தினத்தன்று, தவறாமல் தனது அண்ணனுக்கு கடிதம் எழுதி அதனுடன் பரிசு ஒன்றை கிருஷ்ணப்ரியா கொடுப்பார். ஆனால் இந்த ஆண்டு சில காரணங்களினால், தனது அண்ணனுக்கு கடிதம் எழுதி பரிசு கொடுக்க முடியவில்லை. எனவே தற்போது தனது அண்ணன் பிரசாத்துக்கு கடிதம் எழுதத் துவங்கியுள்ளார்.

இதற்காக 15 காகித ரோல்கள் வாங்கி எழுதத்தொடங்கிய அவர், சிறு வயது முதல் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை, அடி, அழுகை, பாசம், பொய், என்று பல இனிமையான நினைவுகளை பகிர்ந்து ஒரே கடிதமாக எழுதியுள்ளார். சுமார் 434 மீட்டர் நீளமான இந்த கடிதத்தை, அவர் வெறும் 12 நேரத்தில் எழுதி முடித்துள்ளார். பின்னர் இதனை தனது அண்ணனுக்கு அனுப்பியுள்ளார்.

தனது தங்கையிடம் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது, என்ன என்று ஆவலுடன் அதை திறந்து பார்க்கையில் சுமார் 5 கிலோ எடையுள்ள 434 மீட்டர் அளவிலான பேப்பர் கிடைத்துள்ளது. அதனை எடுத்து பொறுமையாக படித்த அண்ணன் பிரசாத் ஆனந்த அதிர்ச்சியில் திகைத்தார். அதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் படிக்க படிக்க அவரது கண்களில் இருந்து ஆனந்த் கண்ணீர் வடிந்தது.

இதையடுத்து, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள 'யுனிவர்சல் ரிக்கார்ட் போரம்' என்ற நிறுவனத்துக்கு, தங்கை தனக்கு எழுதிய கடிதத்தை பிரசாத் அனுப்பியுள்ளார். பின்னர் இது 'உலக சாதனை' என அந்த நிறுவனம் அங்கீகரித்து சான்றளித்துள்ளது.

தனது சகோதரனுக்கு 5 கிலோவில் கடிதம் எழுதி உலக சாதனை படைத்த கிருஷ்ணப்ரியாவுக்கு, சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது.

Also Read: த்ரில்லர் கதாபாத்திரத்தில் அருள்நிதி.. 4 பாகங்களாக உருவாகும் 'டிமாண்டி காலனி'- சீக்ரட்டை உடைத்த இயக்குநர்