India

”டார்ச்சர் செய்தால் அவ்வளவுதான்”: கடன் வசூலிக்கும் ஏஜென்டுகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

இந்தியாவில் அரசு, தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் கடனை திரும்ப வசூல் செய்ய பல்வேறு முறைகளை பயன்படுத்தி வருகின்றன. இதில் சில நிறுவனங்கள் கடனை திரும்ப கொடுக்க ஏஜென்டுகளை நியமனம் செய்து அவர்கள் மூலம் கடனை வசூல் செய்து வருகின்றன.

ஆனால், இந்த ஏஜென்டுகள் பலர் கடன் வாங்கியவர்களை தவறாக பேசுவதும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வருவதும் நடந்து வருகிறது. இதன் காரணமாக கடன் வாங்கியவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. மேலும் ஏஜென்டுகளின் இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஏஜென்டுகள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டுமென ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும் இது போன்ற புகார்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், 'கடன் வாங்கியவர்களிடம் நள்ளிரவு நேரத்தில் கடன் வசூல் செய்யும் ஏஜென்டுகள் அழைப்பு விடுத்து வாடிக்கையாளர்களுக்கு டார்ச்சர் செய்து வருவதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. இது தவிர கடன் வசூல் செய்யும் ஏஜெண்டுகள் அநாகரீகமாக நடந்து கொள்வது, தவறாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார் வருகிறது.

இதுபோன்ற புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வரும்போது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டிருந்தால் நாங்களே நேரடியாக கடும் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதே நேரத்தில் ஒழுங்கு படுத்தப்படாத நிறுவனங்கள் மீது புகார் வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நாங்கள் அறிவுறுத்துவோம். இனி வரும் காலங்களில் கடன் வசூல் செய்யும் ஏஜெண்டுகள் மோசமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.

Also Read: ஆதார்,கை ரேகையை வைத்து 15 லட்சம் கொள்ளை.. நூதன முறையில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது எப்படி?