India

அதிவேகத்தில் வந்த BMW கார்.. நடைபாதையில் இருந்தவர்கள் மீது மோதியதில் 2 சிறுவர்கள் பரிதாப பலி!

டெல்லியில் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், 27 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது மாமாவுக்காக புதிதாக வாங்கிய பி.எம்.டபிள்யூ. கார் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை அறிந்துகொள்ளவதற்காக, காரை வேகமாக ஓட்டிச் செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் ஜூன் 10ஆம் தேதி நடந்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பேசியுள்ள ஒருவர், "அதிகாலை நேரம் என்பதால் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்து விழுந்தது" எனக் கூறியுள்ளார்.

சமீப நாட்களில் இதைப் போன்ற சொகுசு கார்கள் பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2002ஆம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான்கான் ஓட்டிய கார், நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மோடி பிடித்த முதலை..” : பாட புத்தகத்தில் இடம்பெற்ற மோடியின் உளறல் கதைகளால் சர்ச்சை - பின்னணி என்ன?