India
“தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய உ.பி வன்முறை” : யோகி அரசின் புல்டோசர் அரசியலை சாடிய ஓய்வுபெற்ற நீதிபதிகள்!
ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும் சிறுபான்மை இஸ்லாமியர்களின் வீடுகளை, உ.பி. மாநில பா.ஜ.க அரசு புல்டோசர் மூலம் இடித்துத் தரை மட்டமாக்கும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்; வீடுகள் இடிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு, உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் 12 பேரும், மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத்தூதராகப் போற்றப்படும் முகம்மது நபிகளை, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் இழிவுபடுத்தி பேசியது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 15-க்கும் மேற் பட்ட உலக நாடுகள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தன.
இந்தியாவிலும் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. எனினும், இப்போதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாததால், பல் வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பா.ஜ.க அரசானது, நூபுர் சர்மா, நவீன் ஜிண்டாலுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து அவர்களை கைது செய்ததுடன், அவர்களின் வீடுகளை குறி வைத்து, ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் என்று கூறி புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டம் ஆக்கி வருகிறது.
குறிப்பாக, உ.பி மாநிலம் பிரயாக் ராஜில் வன்முறைக்குக் காரணமானவர் என்று கூறி ஜாவத் அகமது என்ற இஸ்லா மியரைக் கைது செய்த உ.பி. காவல்துறை, உரிய அனுமதியின்றி கட்டப் பட்டதாகக் கூறி ஜாவத் அகமதுவின் வீட்டை இடித்துத் தள்ளியது. ஜாவத் அக மதுவின் வீடு இடிக்கப்பட்டதற்கு முந்தைய நாள், சஹரான்பூரில் நடை பெற்ற வன்முறையில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட மேலும் இரண்டு பேரின் வீடுகளும் புல்டோசரால் இடிக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. எனினும் உ.பி. பா.ஜ.க இடிப்பு வேலையை கைவிடுவதாக இல்லை. நாடு முழுவதும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
நீதிபதிகள் கடிதம்
இந்நிலையில்தான், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
“உத்தரப் பிரதேசத்தில் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களின் கருத்துகளுக்கு செவி சாய்க்காமல் மாநில நிர்வாகம் அடக்கு முறையைக் கையாண்டு வருவதாகத் தெரிகிறது. போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980 மற்றும் உத்தரப் பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1986- ஆகிய வற்றின் படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் (யோகி ஆதித்யநாத்) வழி காட்டியுள்ளார்.
தேசத்தின் மனசாட்சியை உலுக்கி வருகின்றன!
அரசின் இந்த கருத்துகள்தான் போராட்டக்காரர்களை மிருகத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் சித்ரவதை செய்வதற்கு காவல்துறைக்கு தைரியத்தை அளித்துள்ளது. உத்தரப்பிர தேச காவல்துறை 300-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது. காவல்துறை காவலில் இருக்கும் இளைஞர்கள் லத்தியால் தாக்கப்படும் காணொலி, போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் வீடுகள் எந்தவித முன்னறிவிப்பு மின்றி இடிக்கப்படும் காணொலி, போராட்டத்தில் ஈடுபடும் சிறுபான்மை இஸ்லாமியர்கள் குறிவைக்கப்பட்டு காவல்துறையால் தாக்கப்படும் காணொலிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி தேசத்தின் மனசாட்சியை உலுக்கி வருகின்றன.
குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இது கொடூரமான ஒடுக்குமுறையாகும். போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டம் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்குப் பதிலாக அவர்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநில அரசு நிர்வாகமே வன்முறையை ஏவிவிடுகிறது. உ.பி. மாநில ஆளும் அரசாங்கத்தின் கொடூரமான, மிருகத்தனமான நட வடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது.
சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதும், குடிமக்களுக்கான உரிமைகள் மீதான வன்முறையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்தால் உறுதிப்படுத்தபட்டுள்ள அடிப்படை உரிமையையும் கேலிக்கூத்தாக்குவதாகும். இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் நீதித்துறையின் திறமை சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது.
கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் மற்றும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் ஆகியவற்றில் தானாக முன்வந்து எடுத்த அதே உணர்விலும், அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற பங்கிலும், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, வி.கோபால கவுடா, ஏ.கே. கங்குலி, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முகமது அன்வர், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், பிரசாந்த் பூஷன், ஆனந்த் குரோவர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!