India

ரூ. 500 அபராதம் விதித்த போலிஸ்.. பழிவாங்கிய மின் ஊழியர்: இருளில் மூழ்கிய காவல்நிலையம்!

உத்தர பிரதேச மாநிலம், பரேய்லி பகுதியைச் சேர்ந்தவர் பகவான் ஸ்வரூப். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது போலிஸார் அவரை வழிமறித்து ஆவணங்களைப் பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அவருக்கு ஆபராம் விதித்துள்ளனர். அப்போது அவர், "அருகேதான் என்னுடைய வீடு இருக்கிறது. நானே ஆவணங்களை எடுத்து வந்து காட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார். ஆனால், போக்குவரத்து போலிஸார் அவரின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்வரூப் போலிஸாரை பழிவாங்க நினைத்துள்ளார். இதையடுத்து காவல்நிலையத்திற்கு மின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இது குறித்து போலிஸார் கேட்டபோது, மின் விநியோக மீட்டர் இல்லை என்றும், சட்ட விரோதமாக மின் இணைப்பு உள்ளதால் இணைப்பைத் துண்டித்தாக கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மின் ஊழியர் ஒருவர் பழிவாங்கும் நடவடிக்கையாகக் காவல்நிலையத்தின் மின் இணைப்பைத் துண்டித்தது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதமும் இதேபோன்ற சம்பவம் படாவுன் காவல்நிலையத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை”: நடிகர் சூரி பெயரை பயன்படுத்திய நிறுவனம்!