India

“போதைப் பொருள் வழக்கிலிருந்து ஆர்யன் கான் விடுவிப்பு : சதி திட்டத்திற்கு பா.ஜ.க காரணமா?” - பின்னணி என்ன?

எம்பிரஸ் என்ற சொகுசுக் கப்பல் மூலம் மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, பார்ட்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிஸாரும் இந்த கப்பலில் ரகசியமாகப் பயணம் மேற்கொண்டனர். கப்பல் நடுக்கடலை நெருங்கியபோது, தடை செய்யப்பட்ட கொக்கைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப் பொருட்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவது உறுதிபடுத்தப்பட்டது.

உடனே சொகுசுக் கப்பலில் வைத்தே போலிஸார் இவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பலரும் சினிமா, ஃபேஷன் துறைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்துள்ளார்.

பின்னர், சொகுசுக் கப்பல் கோவாவுக்குச் செல்லாமல் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. இதனையடுத்து ஷாருக்கின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட 20 பேரில், இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இவ்வழக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், அதிகாரி சமீர் வான்டகே மீது குற்றச்சாட்டுகள் எழுந்தனர். அதன்பின்னர் சமீர் வான்டகே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மும்பை நீதிமன்றத்தில் 6,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். அதில் ஆர்யன் கான் உள்ளிட்ட 5 பேர்களின் பெயர் விடுபட்டிருந்தது. மேலும் போதிய ஆதாரம் இல்லாததாலும், போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படாததாலும் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஆர்யன் கான் வழக்கில் விசாரணை அதிகாரி போதிய வகையில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், செல்போனை பறிமுதல் செய்ததில் கூட முறையான நடைமுறை பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது பா.ஜ.கவின் திட்டமிட்ட சதி என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டினார். மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், “ஆர்யன் கானின் கைது போலியானது. இது ஒரு திட்டமிட்ட சதி. கடந்த ஒரு மாதமாக அடுத்த இலக்கு நடிகர் ஷாருக்கான் தான் எனும் தகவல் புலனாய்வு நிருபர்களிடம் பரப்பப்பட்டது.

சொகுசுக் கப்பலிலோ, துறைமுகத்தின் கப்பல் முனையத்திலோ போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. என்.சி.பி வெளியிட்டுள்ள காணொளி, அந்த அமைப்பின் மண்டல அலுவலகத்தில் எடுக்கப்பட்டது. எனவே கப்பலில் போதை மருந்து கைப்பற்றப்பட்டதாக கூறுவது நாடகம்.” எனத் தெரிவித்தார்.

அப்படியென்றால் ஆர்யன் கான் ஜோடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா அமைச்சர் சொன்னது போல ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது பா.ஜ.கவின் திட்டமிட்ட சதிமா? எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, ஆர்யன் கான் வழக்கில் சிக்கவைத்து மன உளைச்சலை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பின்புலத்தில் பா.ஜ.க நிர்வாகிகளின் தலையீடு ஏதோனும் உள்ளதாக என்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “6 முறை மன்னிப்புக் கடிதம்.. ஆங்கிலேயரிடம் 60 ரூபாய் பென்சன்” : ‘வீர’ சாவர்க்கரின் வீரக்கதை!