India

“பணம் கொடுத்தே முதலமைச்சர் பதவியை பெற்றார் பசவராஜ் பொம்மை” : பகீர் கிளப்பும் சித்தராமையா - பின்னணி என்ன?

கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க மேலிட உத்தரவை அடுத்து எடியூரப்பா பதவி விலகியதால் கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் நேற்று முன்தினம் மாலை முன்னாள் மத்திய அமைச்சரும் விஜயப்புரா பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான பசனகவுடா பாட்டீல் யத்னால், கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியபோது, டெல்லியைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னை அணுகினர். ரூ.2,500 கோடி கொடுத்தால் எனக்கு முதல்வர் பதவி வாங்கித் தருவதாக கூறினார்கள் என்று பேசியது பெரும் சர்ச்சையானது

இந்த நிலையில், முதலமைச்சராக உள்ள பசவராஜ் பொம்மை, பணம் கொடுத்து முதலமைச்சர் பதவியை பெற்றார் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டியுள்ளார். கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசுகையில், பசவராஜ் பொம்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அவர் பணம் கொடுத்தே முதலமைச்சர் பதவியைப் பெற்றார்.

பண பலத்தால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர் தான் பசவராஜ் பொம்மை. இப்படி குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்றிய பசவராஜ் பொம்மை எப்படி மக்களுக்காக வேலை செய்வார்? மேலும் ஆர்.எஸ்.எஸ் அறிவுரைகளை பின்பற்றினால் மட்டும்போதும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அவரை முதலமைச்சராக்கியுள்ளது.

முதல்வர் பதவிக்காக பசனகவுடாவிடம் ரூ.2,500 கோடி பேரம் பேசிய நபர் யார் என்பதை தெரிவிக்க வேண்டும். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இத்தக்கைய குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதுதொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

61 வயதாகும் பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர். பொம்மையின் மகன் ஆவார். பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை 1988 - 1989இல் கர்நாடக முதலமைச்சராக இருந்தவர்.

ஜனதா தள கட்சியில் இருந்த பசவராஜ் பொம்மை, 2008ஆம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவியேற்றபோது உட்கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதுமட்டுமல்லாது, இவர் முதலமைச்சராக ஆன பின்னர் மேகதாது அணை கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை; அணை கட்டியே தீருவோம் என்று பேசியவர் பசவராஜ் பொம்மை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “‘நவீன பெருந்தலைவர் காமராசராக' உருவாக்கி இருக்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி பாராட்டு!