India

மாணவியின் தலையில் விழுந்த மின்விசிறி.. பள்ளி தேர்வறையில் நடந்த விபரீதம் : பெற்றோர்கள் அதிர்ச்சி!

ஆந்திரா மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவிகள் வகுப்பறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது, வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி ஒன்று திடீரென கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவர் மீது விழுந்துள்ளது.

இதனால் வகுப்பிலிருந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, காயம் அடைந்த மாணவிக்கு உடனே முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு மருத்துவர் பரிசோதனை செய்து ஆபத்து ஏதும் இல்லை என கூறியதை அடுத்து மாணவி மீண்டும் தேர்வு எழுதியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து அப்பள்ளியில் இருந்த அனைத்து மின்விசிறிகளும் சோதனை செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் கூட கர்னூல் கோனேகண்ட்லா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இதேபோன்று வகுப்பறையிலிருந்த மின்விசிறி விழுந்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து பள்ளி வகுப்பறையில் இருக்கும் மின்விசிறிகள் விழுந்ததை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் இருக்கும் மின்விசிறிகளையும் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புகளும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

Also Read: கோழிக்கறியில் நெளிந்த புழு.. கடைக்காரரின் பேச்சால் ஷாக்கான வாடிக்கையாளர்.. புதுவையில் பரபரப்பு!