India

வெறுப்பு பேச்சை தடுக்க என்ன நடவடிக்கைதான் எடுத்திருக்கிறீர்கள்? - பாஜக மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம்!

உத்தராகண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் வெறுப்பு பேச்சுகளை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் உத்தராகண்ட் மாநிலத்தில் சாமியார்கள் நடத்திய கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் தூண்டப்பட்டதாக புகார் எழுந்தது.

இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ”இதுபோன்ற வெறுப்பு பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும். மாநில அரசு இதனை அனுமதிக்கக் கூடாது. தொடர்ந்து நடந்தால் அதற்கு தலைமைச் செயலாளர், அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வெறுப்பு பேச்சுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதே போன்று, இமாச்சல பிரதேசத்தில் நடந்த சம்பவம் தொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏன் அதுபோன்று பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், வெறுப்பு பேச்சை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து மே 7ஆம் தேதிக்குள் அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

வெறுப்பு பேச்சை தடுக்க ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? உச்ச நீதிமன்ற வழிகாட்டி நெறிமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை? உடனடியாக இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என உத்தராகண்ட், இமாச்சல பிரதேச மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாளை உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் மீண்டும் சாமியார்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வீர்கர் தலைமையிலான அமர்வு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது போன்ற மாநாடுகளில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து முன்கூட்டியே உரிய அனுமதி வழங்கப்பட்ட பிறகுதான் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Also Read: PM Cares விவகாரம்: ”ஒன்று அரசு நிதியாக அறிவியுங்கள்; இல்லையேல் பிரதமர் படத்தை நீக்குங்கள்” - காரசார வாதம்