India

பா.ஜ.க அமைச்சர் மீது கமிஷன் புகார் சொன்னவர் மர்ம மரணம்.. "சாவுக்கு காரணம்...” என வாட்ஸ்அப்பில் மெசேஜ்!

பெல்காவி மாவட்டம் இண்டல்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் கே பாட்டில். இவர் பில்டிங் காண்ட்ராக்டராக இருந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.

கமிஷன் பிரச்சனை சம்பந்தமாக குற்றம் சுமத்தியிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தன் வீட்டில் இருந்து உடுப்பி வந்து இங்குள்ள சாம்பவி லாட்ஜில் தங்கியிருந்தார். இந்த நிலையில் செல்போன் உடுப்பியில் இருப்பதாக சிக்னல் தெரிவித்தது.

இந்நிலையில், சந்தோஷ் உடுப்பி டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட முக்கிய சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இவர் விஷம் அருந்தி இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

பின்னர் அங்குள்ள அறையில் அவரது செல்போனை போலிஸார் பார்த்தபோது கடைசியாக பாட்டீல் தன் நண்பருக்கு அனுப்பிய செய்தியில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது தெரியவந்தது. தன் சாவுக்கு காரணம் ஈஸ்வரப்பா தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் உடுப்பி டவுன் போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடுப்பி மாவட்ட எஸ்.பி விஷ்ணுவர்தன் கூடுதல் எஸ்.பி சித்தலிங்கப்பா ஆகியோர் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மங்களூரில் தனியார் ஓட்டல் ஒன்றில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை நடத்தினார். இதனை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஈஸ்வரப்பா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதே நேரத்தில் சந்தோஷ்பாட்டீல் சாவுக்கு ஈஸ்வரப்பா தான் காரணம் என்று மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமியும் கூறியுள்ளதால் பதட்டம் நிலவுகிறது. மாநிலம் முழுவதும் அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கக் கோரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

Also Read: ”உங்கள் பொய்களை இங்கே உருட்ட வேண்டாம்!” : பா.ஜ.க கும்பலை வெளுத்தெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!