India
பாகிஸ்தானுக்குள் பாய்ந்த இந்தியாவின் ஏவுகணை... “தாக்குதலா?” - பாக். தளபதிக்கு இந்தியா சொன்ன விளக்கம்!
இந்தியாவின் ஏவுகணை தங்கள் நாட்டில் பாய்ந்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவிலிருந்து அதிவேகமாக பறக்கும் சூப்பர்சோனிக் பொருள் ஒன்று விழுந்ததாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த 9ஆம் தேதி இந்தியப் பகுதியில் இருந்து வந்த அதிவேகமாக பறக்கும் பொருள் ஒன்று நொறுங்கி விழுந்ததை பாகிஸ்தான் விமானப்படையில் வான் பாதுகாப்பு நடவடிக்கை மையம் கண்டுபிடித்தது.
பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள மியான் சன்னு நகரத்தில் நொறுங்கி விழுந்த அந்த மர்ம பொருள், ஹரியானாவின் சிர்சாவில் இருந்து ஏவப்பட்டது.
இந்த பொருள் பயணித்த பாதை இந்தியா மற்றும் பாகிஸ்தான் வான்வெளியில் பல சர்வதேச மற்றும் தேசிய விமானங்கள் வரும் பாதை. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.” எனத் தெரிவித்தார்.
உரிய தகவல் அளிக்காமல் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் இவ்விவகாரத்தில் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையேயான 2005ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதற்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னர் ஏவுகணை குறித்த முழு தகவல்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. வழக்கமான பரிசோதனையின்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்ததாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், “பாகிஸ்தான் பகுதிக்குள் ஏவுகணை தரையிறங்கியது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!