India

“உக்ரைன்ல இருந்து வந்ததும் இதை கொடுக்குறாங்க.. இதைவச்சு என்னங்க செய்றது?” : மோடி அரசை விமர்சித்த மாணவர்!

உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து நடந்தாவது வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் உத்தரவிட்டது.

உக்ரைன் எல்லையில் சிக்கியிருக்கும் மாணவர்கள், “உக்ரைன் எல்லையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி கிடைக்கவில்லை. நாங்கள் உக்ரைன் எல்லைக்குச் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டோம். ஆனால், ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவ இரண்டு நபர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

இதுதொடர்பாக இந்திய தூதரகத்திடம் முறையிட்டபோது அவர்களும் பதிலளிக்கவில்லை. அதற்குப் பின்பு இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பினோம். ஆனாலும் எந்த உதவியும் கிடைக்கவில்லை” எனக் குமுறி வருகின்றனர்.

உக்ரைனிலிருந்து விமானம் மூலம் இன்று சில மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர். நாடு திரும்பிய மாணவர்களில் ஒருவரான பீகாரைச் சேர்ந்த திவ்யான்ஷு சிங் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், "நாங்கள் எல்லை தாண்டி ஹங்கேரிக்குச் சென்ற பிறகுதான் எங்களுக்கு உதவி கிடைத்தது. அதற்கு முன் எந்த உதவியும் இல்லை. நாங்கள் செய்தது எல்லாம் எங்கள் சொந்த முயற்சிதான்.

சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டிருக்காது. அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேறுமாறு முன்கூட்டியே கூறியது.

இப்போது நாங்கள் இங்கே வந்தபிறகு எங்களுக்கு ரோஜாப்பூக்கள் தருகிறார்கள். இதை வைத்து நாங்கள் என்ன செய்வது? அங்கே எங்களுக்கு எதாவது நடந்திருந்தால், எங்கள் குடும்பங்கள் என்ன செய்திருப்பார்கள்?

உரிய நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இப்படி எங்களுக்குப் பூக்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இதுபோன்ற நிகழ்வுகளே தேவைப்படாது." எனச் சாடினார்.

Also Read: “ஏட்டிக்கு போட்டியான பேச்சை நிறுத்துங்க” : உக்ரைன் விவகாரத்தில் மோடி அரசை விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!