India

இந்திய நாட்டின் விவசாயத்தை சிதைக்கும் மோடி அரசின் புதிய ஒப்பந்தம்: world bank சதியின் பகீர் பின்னணி என்ன?

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஆனால் ஒன்றிய அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மக்களின் எந்தப் பிரச்சினைகளையும் பொருட்படுத்தாமல் தொடர் அழிச்சாட்டியங்களை மட்டுமே செய்து வந்த மோடி அரசை நிறுத்தி வைத்து, எதிர்த்து, திக்குமுக்காடச் செய்து, முதன்முறையாக தாம் முன்னெடுத்த நடவடிக்கையிலிருந்து பின்வாங்க வைத்தது விவசாயிகள்தான்.

கோவிட் இந்திய ஒன்றியத்தை உலுக்கிக் கொண்டிருந்த சூழலில், கடந்த 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அவசரவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி கார்ப்பரெட்டுக்கு விவசாயத்தை தாரை வார்க்கும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது ஒன்றிய அரசு. அச்சட்டங்கள் வரைவாக இருந்தபோதே கடும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த விவசாயிகளை மோடி துளி கூட மதிக்கவில்லை. எனவே தில்லியை நோக்கி விவசாயப் படை அணிதிரண்டு செல்வதென முடிவெடுக்கப்பட்டது. டெல்லி எல்லையிலேயே தடுக்கப்பட்டும் தளராமல் எல்லையிலேயே தங்கி லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

காவலர்களை வைத்து அடித்து, பா.ஜ.க பிரமுகர்களின் காரை ஏற்றி என பலரை கொல்லும் நிலைக்கும் சென்றது பா.ஜ.க அரசு. பலர் கொடும் பனியில் உயிரிழந்தனர். ஒரு வருடம் நடந்த போராட்டத்தில் மொத்தமாக 700 விவசாயிகள் உயிரிழந்தனர். ஒரு வருடம் கழித்து திடுமென ஒரு மாற்றம். மோடி தொலைக்காட்சியில் தோன்றி சட்டங்களை ரத்து செய்யப்போவதாக அறிவித்தார். அறிவித்ததோடு மட்டுமல்லாமல், கடகடவென ரத்தும் செய்தார். ஆனால் யாருக்கும் ஆச்சரியம் இல்லை. நடைபெறவிருந்த ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு அஞ்சியே மோடி சட்டங்களை ரத்து செய்தார் என்பதை அறிந்திருந்தனர் விவசாயிகள் உள்ளிட்ட மக்கள் தரப்பு.

விவசாயிகள் பிரதானமாக வைத்திருந்த ‘குறைந்தபட்ச ஆதார விலை’ தொடர்பான கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கையை மட்டும்தான் ஒன்றிய அரசு கொடுத்தது. ஒரு வருட காலப் போராட்டத்துக்கு பின் விவசாயிகளும் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் மீண்டும் வருவோம் என எச்சரித்தே சென்றனர்.

இத்தகைய பின்னணியில்தான் பட்ஜெட் தாக்கல் ஆனது. விவசாயப் போராட்டத்தை நடத்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பட்ஜெட்டைப் பற்றி சொல்கையில், ‘ஒன்றிய அரசு விவசாயிகளை மீண்டும் ஏமாற்றியிருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையைப் பற்றி வெற்று வாக்குறுதிகள் மட்டும்தான் பட்ஜெட்டில் இருக்கின்றன’ எனக் கூறியிருக்கிறது. மேலும் ‘இந்த பட்ஜெட் போராடும் விவசாயிகள் மீதான ஒன்றிய அரசின் பழிவாங்கல். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவதற்கான போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான அறைகூவல்தான் இது, என சங்கம் குறிப்பிட்டிருக்கிறது.

ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல், விவசாய உரிமை மறுப்பு எதுவும் யதேச்சையான விஷயங்களே அல்ல. எல்லாமும் ஒரு பெரும் திட்டத்தின் பகுதிகள்தாம். ஏனெனில் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகள் எல்லாவற்றுக்குமான சூட்சுமக் கயிறு நீள்வது அமெரிக்காவிலிருந்து.

அமெரிக்க நாட்டு நிதியில் இயங்கும் உலக வர்த்தக நிறுவனம் தன்னிடம் நிதி மற்றும் வணிக உதவி பெறும் நாடுகளுடன் பலவித ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒப்பந்தம் Agreement on Agriculture. விவசாயத்தின் மீதான உடன்படிக்கை. அடிப்படையில் இந்த உலக வர்த்தக நிறுவனத்தை புரிந்துகொண்டால் மட்டுமே அது கொண்டிருக்கும் விவசாய உடன்படிக்கை நம்மை பாதிக்கும் விதத்தை புரிந்து கொள்ள முடியும்.

உலக வங்கியிடமிருந்து ஒரு நாடு வாங்கும் பணத்தை அந்நாடு திருப்பி அடைக்க வேண்டும். திருப்பி அடைக்க முடியவில்லை எனில், வருமானம் ஈட்டுவதற்கான வழியை அந்த நாட்டுக்கு சொல்லி தர உருவாக்கப்பட்டதே உலக வர்த்தக நிறுவனம். தனக்கான பணத்தை மீட்டெடுக்க அந்நிறுவனம் சொல்லிக் கொடுக்கும் உத்திகள் நிச்சயமாக குறிப்பிட்ட அந்த நாட்டுக்கு எந்த பலனையும் தராது எனப் புரிந்து கொள்ளலாம். சரியாகச் சொல்வதெனில், அந்த நாட்டை மொத்தமாக அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்ய வைப்பதாகவே உலக வர்த்தக நிறுவனத்தின் உத்திகள் அமையும். அப்படிப்பட்ட ஒரு உத்திதான் விவசாய உடன்படிக்கை.

உலக வர்த்தக நிறுவனத்தை பொறுத்தவரை ஒரு நாட்டின் அரசு அதன் விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் கொடுக்கும் ஆதரவு, பாதுகாப்பு மற்றும் சலுகைகள் யாவும் உலக வர்த்தக நிறுவனம் திட்டமிடும் வணிகத்துக்கு தடையாக இருக்கின்றன. அவற்றை அரசு விலக்கினால்தான் அமெரிக்காவின் வணிகத்துக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கான சலுகைகளை ஒழிக்க வலியுறுத்துவதே Agreement on Agriculture என்றழைக்கப்படும் விவசாய உடன்படிக்கை. அந்த உடன்படிக்கைக்கு இந்தியாவும் உடன்பட்டிருக்கிறது.

உலகமே கொரோனாவை கண்டு அஞ்சி விமானப் போக்குவரத்தை ரத்து செய்து கொண்டிருந்தபோது நம்மூர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிப்ரவரி மாத இறுதியில் அழைத்து வந்த காரணமும் இத்தகைய ஒரு வணிக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவே. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக டெல்லியில் நடந்த அமைதி போராட்டத்துக்குள் ஆர்.எஸ்.எஸ்ஸை இறக்கிவிட்டு கலவரம் செய்துகொண்டிருந்த அதேநேரத்தில்தான் விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி.

அமெரிக்கா நம் நாட்டின் பொருளாதாரத்தையையும் விவசாயத்தையும் உலக வர்த்தக நிறுவனத்தின் வழியாக அழிக்க பல்லாண்டு காலம் முயற்சி செய்து கொண்டு இருந்தது. தற்போது அதற்கு இணைந்து வேகவேகமாக வேலை செய்து கொடுக்கும் பிரதமரும் ஆட்சியும் அமைந்திருக்கிறது. ஆகவே நம் கழுத்துகளை அறுக்கும் வேலைகள் கடகடவென நடந்து கொண்டே இருக்கிறது. எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதென கூறப்பட்டவை யாவும் பிரதமர் வாசித்த பஜனை காட்சிகள் போலத்தான். பாசாங்கு நிறைந்த, திசைதிருப்பும் வேலை!

Also Read: “பெற்ற குழந்தையை 2 லட்சத்து விற்ற தாய் உட்பட 9 பேர் கைது” : விசாரணையில் அதிர்ச்சி தகவல் - பின்னணி என்ன?