The Print

India

“8 வருசத்துல ஒண்ணு கூட உருவாக்கல.. ஆனா 23 PSU-க்களை வித்து திண்ணுட்டாரு” : மோடியை வறுத்தெடுத்த எம்.பி!

பா.ஜ.க. அரசின் ஒற்றைக் கொள்கையாக, அரசின் சொத்துகளை விற்பது மட்டுமே இருக்கிறது. ஆண்டுதோறும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை கொள்கையாகவே வைத்துள்ளது மோடி அரசு.

சமீபத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏர் இந்தியாவை விற்றுவிட்டதை பெருமையாகச் சொல்லி இருக்கிறார். தொடர்ந்து எல்.ஐ.சி, பாரத் பெட்ரோலியம், கப்பல் கழகம், கண்டெய்னர் கழகம் ஆகியவற்றின் பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க அரசு.

மோடி அரசு தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருவது கடும் விமர்சனங்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ரிபுன் போரா, யார் யார் ஆட்சியில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன என்பதை பட்டியலிட்டு பா.ஜ.க அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய ரிபுன் போரா, “நேரு ஆட்சிகாலத்தில் 33 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. லால் பகதூர் சாஸ்திரி ஆட்சியில் 5 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்திரா காந்தி ஆட்சியில் 66 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

மொரார்ஜி தேசாய் ஆட்சியில் 9 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ராஜீவ் காந்தி ஆட்சியில் 16 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. வி.பி.சிங் ஆட்சியில் 2 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

நரசிம்ம ராவ் ஆட்சியில் 14 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஐ.கே.குஜ்ரால் தேவகௌடா ஆட்சியில் தலா 3 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. வாஜ்பாய் அரசில் 17 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன; 7 தனியாருக்கு விற்கப்பட்டன.

காங்கிரஸின் மன்மோகன் சிங் ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட உருவாக்கப்படவில்லை. ஆனால் 23 நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.

எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்காமல் 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கியுள்ளது மோடி அரசு.” என அவர் விளாசியுள்ளார்.

Also Read: நகைக்கடன் தள்ளுபடி: தகுதியுள்ளோர், தகுதியற்றோர் பட்டியலை தயாரிக்க குழு அமைப்பு - தமிழக அரசு அதிரடி!