India

"சீட் கொடுக்கல.. அதான்" : பா.ஜ.கவுக்கு எதிராகக் களமிறங்கிய மோடி ‘ஜெராக்ஸ்’!

உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 7 கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பா.ஜ.க, சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

அதில், குறிப்பாக பா.ஜ.கவில்தான் இந்த கூத்து அதிகம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் முதல் தொண்டன் அவரை என பல கட்டங்களில் இருக்கும் தலைவர்களும் கட்சி மாறி இந்த தேர்தலில் வலுவடைந்துள்ள சமாஜ்வாடி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இதனால் மீண்டும் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் உருவம் கொண்டவர் பா.ஜ.கவுக்கு எதிராக சரோஜினி நகர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அபினந்தன் பதக். இவர் மோடியின் உருவ ஒற்றுமை உடையவர் என்பதால் உ.பியில் பிரபலமடைந்தார். இதையடுத்து பா.ஜ.கவில் சேர்ந்தார். இந்த சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என கேட்டு பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் அவரது கடிதத்திற்குப் பதில் எதுவும் வரவில்லை. இதனால் கோபமடைந்த அபினந்தன் லக்னோவில் உள்ள சரோஜினி நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். இவர் ரயிலில் வெள்ளரிக்காய் விற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பா.ஜ.கவை அதிகாரத்திலிருந்து அகற்றி வங்கக் கடலில் எறிவோம்” : தெலங்கானா முதல்வர் காட்டம்!