India

மும்பையில் கடத்தப்பட்ட குழந்தை.. 4 நாட்களில் தமிழ்நாட்டில் மீட்ட போலிஸ் : நடந்தது என்ன?

மும்பையைச் சேர்ந்தவர் அன்வாரி அப்துல் ஷேன். இவரது நான்கு மாத பெண் குழந்தையை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென காணவில்லை. குழந்தையை பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அன்வாரி குழந்தையைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் குழந்தை காணாமல் போன அதே தினத்தில் அன்வாரியுடன் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த இப்ராகிம் ஷேக் என்பவரையும் காணவில்லை என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து விசாரணை செய்ததில் குழந்தையை தமிழ்நாட்டில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ.4.8 லட்சத்திற்கு விற்றுவிட்டதாகக் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் குழந்தையை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக மலாடு, ஜோகேஷ்வரி, கல்யாண், தானே உட்பட 6 பேர் கொண்ட கும்பலை போலிஸார் கைது செய்தனர். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்த மும்பை போலிஸார் நான்கு நாட்கள் அந்த தம்பதிகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், மும்பையிலிருந்து கடத்தி வரப்பட்ட குழந்தையை போலிஸார் மீட்டனர். மேலும் குழந்தையை வாங்கிய தம்பதியைக் கைது செய்து விசாரணைக்காக மும்பை அழைத்துச் சென்றனர்.

மேலும் குழந்தையின் தந்தை தான்தான் என இப்ராகிம் ஷேக் போலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளதால் இருவரின் டி.என்.ஏவும் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஹேக் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ட்விட்டர் கணக்கு.. Elon Musk பெயரில் ட்வீட் வெளியானதால் பரபரப்பு!