India

"லூதியானா குண்டுவெடிப்பை நிகழ்த்தியது முன்னாள் போலிஸ்காரர்" : விசாரணையில் அதிர்ச்சி தகவல் - நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் லுாதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது முன்னாள் போலிஸ்காரர் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதியன்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது நீதிமன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தது. இதனால் 20க்கும் மேற்பட்டோர் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்தனர். மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது ககன்தீப்சிங் என்ற முன்னாள் போலிஸ்காரர் எனத் தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ககன்தீப் சிங் என்ற முன்னாள் போலிஸ்காரர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளவர் என்பதும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களை மிரட்டவே நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாப் டி.ஜி.பி சித்தார்த் சத்தோபாத்யாயா கூறுகையில், “லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தது ககன்தீப் சிங் என்பது தெரியவந்துள்ளது தலைமை காவலர் பணியில் இருந்த அவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு கைதானார். இதனால், பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

2 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், கடந்த செப்டம்பர் மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவர் மீதான போதைப்பொருள் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்தது. நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களை மிரட்டுவதற்காக வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட அவர், நீதிமன்ற கட்டட கழிவறையில் அதனை பொருத்தியுள்ளார்.

வெடி பொருட்கள் ககன்தீப் சிங்கிற்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ககன்தீப் சிங்கிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிம்கார்டு மற்றும் அவரது கையிலிருந்த டாட்டூ மூலம் இறந்தவரின் அடையாளம் உறுதிபடுத்தப்பட்டது. அவரது குடும்பத்தினரும் அடையாளம் காட்டினர்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: விமானப்படையில் மீண்டும் ஒரு விபத்து.. விங் கமாண்டர் பலி.. MIG ரக விமானங்களால் தொடரும் ஆபத்து!