India

“இது ஊழல் இல்லைன்னா வேறு எது ஊழல்?” : உ.பி பா.ஜ.க அரசை வெளுத்தெடுக்கும் பிரியங்கா காந்தி!

ராமர் கோயில் நிலம் விற்றதில் நடந்துள்ள ஊழல் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோயில் கட்டுவதற்காக ராமர் கோயில் அறக்கட் டளை உருவாக்கப்பட்டு, 70 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை சார்பில் பொதுமக்களிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கோயில் அருகேயுள்ள ஒரு நிலத்தை அறக்கட்டளை நிர்வாகம் 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. தனிநபரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த நிலம், சில நிமிடங்களிலேயே அதிக தொகைக்கு அறக்கட்டளை மூலம் விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராமர் கோயில் நிலம் விற்கப்பட்ட விவகாரத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதார ஆவணங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களிடம் வழங்கினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “அயோத்தியில் ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலத்தை முதலில் ரூ.8 கோடிக்கும் இரண்டாவது முறையாக ரூ.18.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. இரண்டு துண்டு நிலமாக மொத்தம் 26.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிலத்தில் ஏற்கனவே பிரச்னை இருந்திருக்கிறது. இதுகுறித்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. எனவே, நிலத்தை யாராலும் விற்க முடியாத நிலை இருந்துள்ளது. அந்த நிலம், முதலில் ஒரு தனிநபருக்கு ரூ.8 கோடிக்கு விற்கப்பட்டது.

5 நிமிடத்தில், அதே நிலத்தை ரூ.18.50 கோடிக்கு அவர் விற்றுள்ளார். இது ஊழல் இல்லை என்றால், வேறு எது ஊழல்? நில பேரங்களில் சாட்சியங்கள் யார்? ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர்மட்ட உறுப்பினராகவும், ராமர் கோவில் கமிட்டியில் அறங்காவலராகவும் உள்ளார். மற்றொருவர் அயோத்தியின் மேயர்.

இந்த ஊழல் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு, ஜில்லா பரிஷத் அளவிலான அலுவலர் ஒருவரை நியமித்துள்ளது. ஆனால் ராமர் கோவில் கட்டுவது உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுவதால், இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் கீழ் வர வேண்டும்.

இந்த நிதியை ஊழலற்ற நிலையில் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடிக்கு உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: அயோத்தி ராமர் கோவில், ரபேல் வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பளித்த நீதிபதிக்கு ராஜ்யசபா எம்.பி பதவி பரிசு ?