India
”எந்த விலங்குகளும் ரயிலில் அடிபட்டு பலியாகக் கூடாது” - ரயில்வேக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய ஆணை!
தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தியதன் மூலம் 69 சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
யானைகள் கடக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள 19 கி.மீ. தூரத்திற்கு வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், யானைகள் கடந்து செல்ல தண்டவாளங்களுக்கு அடியில் பாதை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், யானைகள் மட்டுமல்லாமல் எந்த விலங்குகளும் ரயிலில் அடிபட்டு பலியாவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் எனவும், ரயில் தண்டவாளங்களை ஒட்டி சூரிய மின்சக்தி வேலிகளை அமைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.
அதேபோல, யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் தெர்மல் ஸ்கேனிங் முறையில் எச்சரிக்கும் அதி நவீன கேமராக்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதை தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து வனத்துறையுடன் கலந்தாலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!